கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; முக்கிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்!

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஜெயலலிதாவின் அறைகளில் சேகரிக்கப்பட்ட முக்கிய ஆவணங்களை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்  சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர்.  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் அவருக்கு சொந்தமான கொடநாடு…

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற ஜெயலலிதாவின் அறைகளில் சேகரிக்கப்பட்ட முக்கிய ஆவணங்களை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்  சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம்
தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்தது. அங்கு பணியில் இருந்த
காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு பங்களாவில் இருந்த பொருட்களை
கொள்ளையடித்து தப்பி சென்றனர். இவ்வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான், வாளையார்
மனோஜ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் கனகராஜ் சேலத்தில்
வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது
உறவினரான ரமேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றி வந்த தினேஷ்குமார் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ், கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் உட்பட முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் நபர்கள் நிபந்தனை ஜாமினில் உள்ளனர்.

இவ்வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 6
ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் நிலையில் இவ்வழக்கினை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் நபர்கள் அவர்களுக்கு தொடர்புடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் என பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறைகளில் சிபிசிஐடி போலீசார் நடத்திய ஆய்வில் சேகரிக்கப்பட்ட 9 வகையான பொருட்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் வரைபடத்தை சிபிசிஐடி போலீசார் உதகை மாவட்டம் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதரிடம் தாக்கல் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.