உலகளவில் 20 முதல் 30% புதிய வேலைகள் Work From Home முறையில் செயல்படக்கூடும் என போர்ப்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புகளுக்கு நடுவே உலக இளைஞர் திறன் மேம்பாட்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய காலத்தில் இளைஞர்களின் வேலை முறைகளை கொரோனா வெகுவாக மாற்றிவிட்டது என்றே கூறலாம். அந்த வகையில், கொரோனா தாக்கம் காரணமாக, உலகளவில் 20 முதல் 30 சதவீத புதிய வேலைகள் Work From Home முறையில் செயல்படக்கூடும், என போர்ப்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. கொரோனா பேரிடர் கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ள அதே வேளையில், பெரும் நிறுவனங்கள் செயல்படும் முறையையும் மாற்றியமைத்துள்ளது.
கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்தன. இது தொடங்கி ஒரு வருடத்தைக் கடந்த நிலையிலும், Work From Home மாடலை அந்நிறுவனங்கள் நீட்டித்துள்ளன. இதே போல், இந்தியாவிலும் பெரும்பாலான ஐடி நிறுவனங்களும் Work From Home முறையையே பின்பற்றி வருகின்றன.
இந்நிலையில், உலகளவில் 20 முதல் 30 சதவீத வேலைகள் நிரந்தரமாக Work From Home மாடலுக்கு மாறக்கூடும் என பிரபல போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தற்போது 5ஜி தொழில்நுட்பம் அறிமுகமாகியுள்ள நிலையில், இந்த விகிதம் 30 முதல் 40 வரையிலும் அதிகரிக்கக்கூடும், எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகில் 84% நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாகி வருவதாகவும் போர்ப்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக இளைஞர் திறன் மேம்பாட்டு தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு இது புதிய வாய்ப்புகளை அளிப்பதாகவே கருதப்படுகிறது.
டிஜிட்டல் மயமாக்கல் என்பது தற்போதைய காலகட்டத்தின் அவசிய தேவையாக மாறியுள்ளதாக திறன் மேம்பாட்டுக்கான வகுப்புகளை வழங்கும் வாத்வானி அறக்கட்டளையின் துணைத் தலைவர் சுனில் தஹியா கூறுகிறார். எதிர்காலத்தில் சுகாதாரம், அழகுக்கலை, ஆரோக்கியம், நுகர்வோர் சேவை உள்ளிட்ட துறைகளில், டிஜிட்டல் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் சிக்கல்களை தீர்க்கும் திறன், நெருக்கடியான சூழல்களில் திறம்பட முடிவுகளை எடுப்பது உள்ளிட்ட திறன்களைக் கொண்டோருக்கே வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், 9 சதவீத இந்தியர்கள் அடுத்த ஆண்டுக்குள், இன்று நடைமுறையில் இல்லாத புதிய வேலைகளில் இருக்கக்கூடும் என்றும், தற்போதைக்கு உள்ள 37% திறன்கள் அடுத்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளைப் பெற தேவையான தகுதிகளாக இருக்காது எனவும், FICCI-யின் மற்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது.









