பொது மக்கள், எவ்வித அச்சம் இன்றி காவல் நிலையங்களுக்கு வந்து புகார் தருவதற்கு வசதியாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்கவும், காவல்துறையினர் மீது எவ்வித முறைகேடுகளுக்கு இடமின்றி செயல்படவும், தமிழக காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக, அனைத்து காவல்நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டிருப்பது, ஆவடி காவல் ஆணையரகத்தில் மட்டுமே.
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் இருந்து, தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள், கடந்த ஜனவரி 1 ஆம் தேதி அன்று முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. போதுமான இட வசதி, காவலர்கள் எண்ணிக்கையின்றி ஆவடி ஆணையரகம், தொடங்கப்பட்ட நிலையில், முதல் போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்பட்டவர், சந்தீப் ராய் ரத்தோர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை மாநகரம் சட்டம் ஒழுங்கு பணியிலும், மத்திய அரசின் தொழில் பாதுகாப்பு படை, பேரிடர் மீட்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி விட்டு, தமிழக காவல்துறை பணிக்கு திரும்பிய சந்தீப் ராய் ரத்தோர், முதலமைச்சர், ஸ்டாலின், டிஜிபி சைலேந்திர பாபு, ஆகியோரை பல முறை சந்தித்து, ஆவடி காவல் ஆணையரகத்திற்கு கூடுதல் கமிஷ்னர், இணை கமிஷ்ணர், 5 துணை கமிஷ்ணர் மற்றும் 5 ஆயிரத்து 400 காவல் அதிகாரிகளை நியமித்ததோடு, காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக ஆவடி ஆணையரகத்தில் உள்ள 25 காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவி, அனைத்து சிசிவிடி கேமராக்களையும், ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறையோடு, இணைத்துள்ளார்.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும், ஆய்வாளர் அறையில் முதல் நுழைவாயில் வரை 6 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறையோடு, இணைத்துள்ளார். இதே போல மெபைல் டேட்டா, டெர்மினல் முறைப்படி கட்டுப்பாட்டு அறையோடு, இணைக்கப்பட்டதுடன், ரோந்து வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பணிக்கு, 43 ஜீப்புகளும், போக்குவரத்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள 5 ஜீப்புகளிலும் இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அவசர கால கட்டுப்பாட்டு அறையில் இருந்து பெறப்படும், பொதுமக்களின் பிரச்னைகளை உடனடியாக கேட்டறிந்து சம்பந்தப்பட்ட இடத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையை கட்டுபாட்டு அறையில் இருந்து கண்காணித்து நடவடிக்கை எடுப்பதன் மூலம், 5 முதல் 8 நிமிடத்திற்குள் பொது மக்கள் கூறும் பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்கிறார் காவல் கட்டுப்பாட்டு அறை தொழில் நுட்பப்பிரிவு உதவி ஆய்வாளர் தரணி குமார்.
கட்டுப்பாட்டு அறையில், முதல் பெண் ஆய்வாளராக சுதா நியமிக்கப்பட்டார். நவீன கட்டுப்பாட்டு அறையை ஜுலை மாதம் 27ஆம் தேதி அன்று டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். இந்த கட்டுப்பாட்டு அறை குறித்து, கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோர், கூறும் போது, “காவல் ஆணையரங்களில் கட்டுப்பாட்டு அறைகள் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் ஆவடி ஆணையரகத்தில், போக்குவரத்து, அவசர கட்டுப்பாட்டு அறை, உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும், உடனடி நடவடிக்கை எடுக்கும் மையமாக செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் உயர் அதிகாரிகள் மாநகரம் முழுவதும். சட்டம் ஒழுங்கு போக்குவரத்து நெரிசல், கோயில் திருவிழாக்கள் ஊர்வலங்கள், போன்றவற்றை நேரடியாக கண்காணிப்பதோடு, தேவையான நடவடிக்கைகைளை உடனடியாக, எடுக்க இங்கிருந்தபடியே உத்திரவிட முடியும் என்கிறார்.
காவல் நிலையங்களில், சிசிடிவி பொருத்தப்பட வேண்டம், பொது மக்களிடம் காவலர்கள் எவ்வாறு நடந்துக்கொள்கிறார்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நீண்ட காலமாகவே எழுந்து வந்தன. அதன்படி முன்மாதிரி காவல் கட்டுப்பாட்டு அறையாக ஆவடி ஆணையரகம் அமைந்துள்ளது.