மகாராஷ்டிர அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் முதலமைச்சராக இருந்த சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி இழந்ததை அடுத்து, அதே கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பாஜக உதவியுடன் முதலமைச்சரானார். துணை முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்றார்.
இருவரும் பதவி ஏற்று 40 நாட்கள் ஆகின்றன. தற்போது வரை இருவர் மட்டுமே அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக கடந்த 40 நாட்களில் 7 முறை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று பாஜக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இருதரப்புக்கும் இடையே சுமூக முடிவு எட்டப்படாததால், அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
இந்நிலையில், முதற்கட்ட அமைச்சரவை விரிவாக்கம் நாளை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்ட்ர ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பாஜக மற்றும் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் 12 முதல் 15 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என கூறப்படுகிறது.
ஏக்நாத் ஷிண்டேவை நம்பி அவரோடு வந்த பலர் அமைச்சர் கனவுடன் இருக்கிறார்கள்.
அத்தனை பேரையும் அமைச்சராக்க முடியாது என்பதால், நிலைமையை சமாளிப்பது ஷிண்டேவுக்கு பெருத்த சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.
முதற்கட்ட அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு ஏற்படும் சூழலைப் பொறுத்து அடுத்தகட்ட அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.









