கால்பந்தாட்ட வீராங்கனை மரணத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (17) என்பவர் காலில் காயத்துடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சையால் பிரியா உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சென்னை, அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையினால் கால்பந்து வீராங்கணை ஆர்.பிரியாவின் கால் அகற்றப்பட்ட நிலையில், இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
இம்மரணத்திற்கு காரணமான திமுக அரசினை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் ரூ.10 இலட்சம் என அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டினை ரூ.2 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். செல்வி பிரியாவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்ற பிரியாவிற்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே உயிரிழப்பிற்கு காரணம் என்று தெரிய வருகிறது . இளம் வயதில் கால்பந்து விளையாட்டில் சாதிக்க துடித்த அவரின் கனவு கனவாகவே போய்விட்டது.
வீராங்கனை மாணவி பிரியாவிற்கு அரசு மருத்துவர்களின் கவனக் குறைவால் அளிக்கப்பட்ட சிகிச்சையால் உயிரிழந்தது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இளம் வயதில் அவரை இழந்து அவரது குடும்பமும், உறவினர்களும் மீளாத்துயரில் இருக்கின்றனர். தவறான சிகிச்சை அளித்த சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வளர்ந்து வரும் இளம் வீராங்கனை பிரியாவின் இழப்பு கால்பந்து விளையாட்டிற்கு பேரிழப்பாகும். பிரியாவின் இழப்பிற்கு அவர்களது குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.








