ஆவின் நிர்வாகம் எப்படி நடத்த வேண்டும்; பாஜக தலைவரை கேட்டால் ஐடியா கொடுப்பார் -கரு. நாகராஜன்

ஆவின் நிர்வாகம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் பாஜக தலைவரைச் சந்தித்துக் கேட்டால் நிறைய ஐடியா கொடுப்பார் என பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் கூறியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்டம்,…

ஆவின் நிர்வாகம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் பாஜக தலைவரைச் சந்தித்துக் கேட்டால் நிறைய ஐடியா கொடுப்பார் என பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் கூறியுள்ளார்.

சென்னை கிழக்கு மாவட்டம், மடிப்பாக்கம் உள்ளகரம் பகுதியில், மடிப்பாக்கம் மண்டல் பாஜக சார்பில் பால் விலை, மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது சொத்து வரி, மின் கட்டண உயர்வு, ஆவின் பால் ஆகியவற்றின் விலை உயர்வு குறித்து தமிழக அரசை விமர்சித்தனர்.

இறுதியாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் பேசுகையில், ஆவின் நிர்வாகம் எப்படி நடத்தவேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் பாஜக தலைவர் அண்ணாமலையைச் சந்தித்துக் கேட்டால் நிறைய ஐடியா கொடுப்பார்.

ஏனென்றால் ஆவின் மிக்ஸ் தயாரிக்கச் சொல்லி கொடுத்து இப்போ தயாரிக்கிற நிலை ஏற்பட்டது எங்க தலைவர் அண்ணாமலையால் தான். ஆவின் நிர்வாகம் தான் தயாரிக்கும் ஸ்வீட்களை அரசு ஊழியர்களும் மற்றவர்களுக்கும் கொடுப்பதற்குத் தயாராக வேண்டும். ஏன் வெளியில் போய் டெண்டர் போட்டு கொடுக்கவேண்டும் என்று கேட்ட உடன் தான் தமிழக அரசுக்கே தயாரித்துக் கொடுக்க வேண்டும் என எண்ணம் வந்தது.

பால் விலைய 12 ரூபாய் உயர்த்தியதற்குப் பதிலாக அண்ணாமலையிடம் கேட்டால் எப்படி லாபம் பார்ப்பது என்பதை சொல்லி கொடுத்திருப்பார். எந்த தேர்தல் வந்தாலும் திமுக தோல்வியைச் சந்திக்கப் போவது உறுதி.

கால்பந்து வீராங்கனை பிரியா கால் நீக்கப்பட்டு அதனால் உயிரிழந்து இருக்கிறார். இன்றைக்கு அமைச்சர் ரொம்ப கூலாக பேட்டி கொடுக்கிறார். இரண்டு மருத்துவர்கள் தவறு செய்து விட்டார்கள் அவர்கள் கவனக் குறைவு தான் உயிரிழப்பு காரணம் என்று சொல்கிறார்.

இது எவ்வளவு பெரிய அநியாயம் அப்பெண்ணின் கனவு என்ன, குடும்பத்தின் கனவு எப்படிப்பட்ட கனவாக இருந்திருக்கும், அவர் எவ்வளவு பெரிய வீராங்கனையாக வந்திருப்பார். உயிரிழப்பிற்குக் காரணம் நாங்கள் சொல்லவில்லை, மாநில அமைச்சர் சொல்கிறார். இது தான் திராவிட மாடல் அரசா என கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.