உலகளவில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு, தமிழ் திரையுலகில் வெளியான திரைப்படங்கள் குறித்து விரிவாக காணலாம்.
சமீபகாலமாக இந்தியாவில் விளையாட்டு சார்ந்த திரைப்படங்கள், அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்தியாவில் விளையாட்டை மையப்படுத்தி வெளியாகிவரும் திரைப்படங்களில், பெரும்பான்மையானவை அதில் சாதித்த பல்வேறு நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலற்றை மையமாக கொண்டவையே.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி என ஒவ்வொரு விளையாட்டிற்காகவும் போட்டி போட்டுக்கொண்டு திரைப்படங்கள் வெளியாகி வரும் வேளையில், அதில் இருக்கும் கதாப்பாத்திரங்களைக் காட்டிலும், அவர்களுடைய வாழ்வியலை மையமாக கொண்டு தரமான கதைக்களங்கள் அமைந்து வருகின்றன. குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு சார்ந்த திரைப்படங்களில் பெரும்பான்மையானவை கால்பந்து குறித்த திரைப்படங்களே.
1996ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் மற்றும் 2003ஆம் ஆண்டு வெளியான எனக்கு 20 உனக்கு 18 எனும் திரைப்படங்கள், 80களில் பிறந்தவர்களின் காதலுக்கு புது அடையாளாத்தை உருவக்கின. மேலும் கல்லூரி இளைஞர்கள் கால்பந்து விளையாட்டின் மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு, அதனை தங்களிள் ஒன்றாக எடுத்துக்கொண்டு பயணிக்கவும் வழித்தடமாக அமைந்தன.
அதன் வரிசையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாஸ், சிபிராஜ் நடிப்பில் வெளியான லீ உள்ளிட்ட திரைப்படங்கள் கால்பந்து விளையாட்டினை மையப்படுத்தி வெளியானவை. அதிலும் குறிப்பாக இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான லீ திரைப்படத்தின் கதைக்களம், கால்பந்து விளையாட்டில் உள்ள ஆழமான அரசியலை பேச வைத்த படங்களில் ஒன்றாகவும், நடிகர் சிபிராஜின் கம் பேக் படங்களில் ஒன்றாகவும் அமைந்தது. திறமைகள் புறக்கணிக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதையும் உணர்த்தியுள்ளது லீ திரைப்படம்.
அதனை தொடர்ந்து கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளியான திரைப்பங்களின் வரிசையில் நடிகர் கதிர் நடிப்பில் வெளியான ஜடா மற்றும் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான சாம்பியன் உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ்நாட்டில் வட சென்னை கால்பந்து விளையட்டில் எத்தகைய முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் அப்பகுதியில் இளைஞர்களிடையே இருக்கும் ஆர்வம் உள்ளிட்டவற்றை தெள்ளத்தெளிவாக காட்சிப்படுத்தின.
அதுமட்டுமின்றி 2014ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தில், வடசென்னை மக்களின் வாழ்வியலில் கால்பந்து விளையாட்டு எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை அவ்வப்போது திரைக்கதைக்கு ஏற்றார் போல காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குனர் பா.ரஞ்சித்.
இவை அனைத்தும் ஒரு புறமிருக்க, நடிகர் விஜய் நடிப்பில் இளம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம், இந்திய சினிமாவில் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே, உணர்வுப்பூர்வமான மற்றும் பெண்களுக்கான உரிமைகள் குறித்து உரக்கச் சொல்லும் படமாகவும் பேசப்பட்டது.
இது போல கால்பந்தை மையமாக கொண்டு உருவான படங்கள் அனைத்தும், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அதன் மீது ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைந்துள்ளன. கிரிக்கெட், பேட்மிண்டன், ஹாக்கி என்பதோடு மட்டுமல்லாது, கால்பந்து மீதான ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இத்திரைப்படங்கள் அமைந்துள்ளன என்றே சொல்லலாம்.