2 ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாதா? – சிக்கன், மட்டன் கிரேவி ஏற்றுமதியில் அசத்தும் சிவகங்கை பெண்!

சிவகங்கை மாவட்டத்தில் பட்டதாரி பெண் ஒருவர் இரண்டு ஆண்டுகளானாலும் கெட்டு போகாத ரசாயனம் கலக்காத உணவுகளை ஏற்றுமதி செய்து அசத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம், சோழபுரம் கிராமத்தில் பொறியியல் பட்டதாரி பெண் ஒருவர், மட்டன்…

சிவகங்கை மாவட்டத்தில் பட்டதாரி பெண் ஒருவர் இரண்டு ஆண்டுகளானாலும் கெட்டு போகாத ரசாயனம் கலக்காத உணவுகளை ஏற்றுமதி செய்து அசத்தி வருகிறார்.

சிவகங்கை மாவட்டம், சோழபுரம் கிராமத்தில் பொறியியல் பட்டதாரி பெண் ஒருவர், மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு உள்ளிட்ட உணவு வகைகளை ரசாயனம் இன்றி இயற்கை முறையிலேயே பதப்படுத்தி, இரண்டு ஆண்டுகள் ஆனாலும், கெட்டுப்போகாத வகையில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அசத்தி வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடலெட்சுமி. இவருக்கு சுரேஷ் என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. பொறியியல் பட்டதாரியான வெங்கடலெட்சுமி சுய தொழில் தொடங்க முடிவெடுத்தார். சிவகங்கை பகுதியில் உள்ள பாரம்பரிய உணவு வகைகளை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என விரும்பிய அவர், நீண்ட நாட்களுக்கு கெடாமல் அவற்றை பாதுகாக்க ரசாயன முறையை விடுத்து, இயற்கை முறையை தேர்ந்தெடுத்தார்.

இதையும் படியுங்கள் : அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பநிலையை கட்டுப்படுத்தி உணவு வகைகளை பதப்படுத்தும் இயற்கையான முறையில் பயிற்சி பெற்ற வெங்கடலெட்சுமி, கடந்த 2015ம் ஆண்டு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதில் அதிகளவில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கினார். 90 சதவிகிதம் பெண்கள் மட்டுமே பணிபுரியும் இந்நிறுவனத்தில், சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, செட்டிநாடு சிக்கன், ப்ரான் கிரேவி, மீன் குழம்பு மசாலா, பிரியாணி மசாலா, இட்லி, பொங்கல் என விதவிதமான உணவு வகைகள் தயார் செய்யப்படுகின்றன.

அவை அலுமினிய பாக்கெட்டுகளில் காற்று புகாத வகையில் அடைக்கப்பட்டு, குறிப்பிட்ட வெப்ப நிலையில் பதப்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் அந்த உணவுகள் சுமார் 2 ஆண்டுகள் வரை கெட்டுப் போகாமல் இருக்கின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மேலும் இங்கு தயாரிக்கப்படும் உணவுகள் ரெடிமெட் முறையில் தயாரிக்கப்படுவதால், இவற்றை சூடு செய்து சாப்பிட்டாலே போதுமானது. இந்த உணவுகள் வேலைக்குச் செல்லும் பெண்களின் வேலைப் பழுவை குறைக்கும் விதமாக இருப்பதால், வெளிநாடுகளில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

– அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.