முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

“திராவிட மாடல்” முழக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓங்கி ஒலிப்பது ஏன்?


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் திராவிட சிந்தனைகளை தமிழகத்தில் வேரூரன்ற செய்தார்கள் என்றால், அதனை ஒரு மாடலாக்கி, அந்த திராவிட மாடலை இந்தியாவையே உற்றுநோக்க வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திராவிட மாடல் என்பது ஒரு சொல் அல்ல செயல் என்பதை தமது தலைமையிலான திமுக அரசு நிறைவேற்றிக்கொண்டிருக்கும் திட்டங்கள் மூலம் நிரூபித்து வருகிறார் அவர்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  திராவிட மாடல் சிந்தனையை செயல்படுத்தும் விதம் குறித்து அவரது பிறந்த நாளான இன்று  ஒரு சிறப்பு கட்டுரை.

தாம் செல்லும் இடங்களில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க நேரிடும்போதுகூட, திராவிடச் செல்வன், திராவிடச் செல்வி, திராவிட அரசன் என பெயரிட்டு திராவிட சித்தாந்தத்தை அடுத்த தலைமுறைக்கு  கொண்டு செல்வதிலும் அக்கறையோடு செயல்பட்டு வருகிறார் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். இந்த அளவிற்கு அவர் ஆர்வம் காட்டுவது ஏன்?

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்,  என ஒருமுகத்தன்மை கொண்ட நாடாக மாற்ற பாஜக முயல்வதால் அதன் சித்தாந்தங்களை முறியடித்து, சமூக நீதியை பாதுகாக்கவே திராவிட மாடல் என்கிற கருத்தாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓங்கி ஒலித்துவருவதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர். திராவிட சித்தாந்தத்தின் பலனை தமிழகத்தை தாண்டி தென் இந்தியாவை தாண்டி நாடெங்கிலும் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலக் கட்சியின் தலைவர் என்கிற முறையில் தனக்கு இருப்பதை உணர்ந்தும் திராவிட மாடல் சித்தாந்தத்தை மு.க.ஸ்டாலின் அதிகம் முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

“மதங்கள், ஜாதிகள் பெயரில் அரசியல் நடத்தும் ஆரிய மாடல் உள்ள வட மாநிலங்களுக்கு தெரியாத சமூக நீதி, சமத்துவ தத்துவங்களை திராவிட மாடலாக அடையாளம் காட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திராவிட மாடல் என்ற தத்துவத்தால் வட மாநிலங்களை அவர் திரும்பி பார்க்க வைத்துள்ளார்” என்கிறார் திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் ராகுல்காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசிய அளவிலான அரசியல் கட்சிகளின் தலைவர்களிடையே பேசிய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியாவெங்கும் விதைப்பேன் என சூளுரைத்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 15ந்தேதி  விருதுநகரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தியா முழுமைக்குமான கடமை திமுகவிற்கு இருப்பதாக தெரிவித்தார்.  நாடு ழுழுமைக்கும் சமூக நீதியையும், சமதர்மத்தையும் பரப்ப வேண்டும் என்று கூறிய அவர்,  தமிழ்நாடு மட்டும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருந்தால் போதாது, அனைத்து மாநிலங்களும் தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இதுபோன்ற உரைகளை  சுட்டிக்காட்டும் திமுகவினர்,  பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் சித்தாந்தங்களால் நாட்டு மக்களுக்கு ஏற்படும் அபாயங்களை தடுக்கும் கேடயமாக திராவிட மாடல் சிந்தனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூக்கிப்பிடிப்பதாகக் கூறுகின்றனர்.

திராவிட மாடல் கொள்கை, திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்பதை பல்வேறு மேடைகளிலும், அறிக்கைகளிலும், கூட்டங்களிலும் விளக்கியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ”எல்லா சமூகங்களுக்குமான வளர்ச்சி. எல்லா மாவட்டங்களையும் சமூகத்தின் எல்லா பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. இது தான் திராவிட மாடல். எல்லோரையும் உள்ளடக்கிய இந்த பாணியில் தமிழ்நாடு வளர வேண்டுமென நினைக்கிறேன். மேலும், தொழில்துறை வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வியில் சாதனை போன்ற எல்லாமும் ஒரே சமயத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இருக்க முடியாது. சமூக முன்னேற்றமும் இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல் ஆகிய ஐந்தும் முன்னேற்றமடைய வேண்டும். அம்மாதிரியான ஒரு வளர்ச்சியைத்தான் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் காண விரும்பினர். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி” என்று கடந்த ஆண்டு ஜூலை 9ந்தேதி நடைபெற்ற பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டத்தில் திராவிட மாடல் குறித்து நீண்ட விளக்கத்தை அளித்து,  அதன்படி தமிழகத்தை முன்னேற்ற ரகுராமராஜன் உள்ளிட்ட பொருளாதார அறிஞர்களிடம் ஆலோசனைக் கேட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

”அண்ணா ஆட்சி இருந்தபோது அண்ணா ஆட்சி நடந்ததாகக் கூறினார்கள். கருணாநிதி ஆட்சி இருந்தபோது கருணாநிதி ஆட்சி நடந்ததாகக் கூறினார்கள். ஆனால் தற்போது நடைபெறுவது ஸ்டாலின் ஆட்சியல்ல, திராவிட மாடல் ஆட்சி. அண்ணா ஆட்சியும் கருணாநிதி ஆட்சியும் சேர்ந்ததுதான் திராவிட மாடல் ஆட்சி”  என்றும் திராவிட மாடல் ஆட்சிக்கு மற்றொரு நிகழ்ச்சியில் விளக்கம் அளித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  ”திராவிட மாடல் மதங்களுக்கு எதிரானது அல்ல, மதவாதத்திற்குதான் எதிரானது” என்பதையும் உரக்கச் சொல்கிறார் அவர்.

இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுக்கும்போது, மத்திய பாஜக அரசின்  சர்ச்சைக்குரிய திட்டங்களை  கண்டிக்கும்போது, திமுகவின் வெற்றிகளில் பெருமிதம்கொள்ளும்போது, தொண்டர்களுக்கு மடல் எழுதி உற்சாகப்படுத்தும்போது,  என ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட சித்தாந்தம் மீது வைத்துள்ள பற்றும், திராவிட மாடல் ஆட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கையும் வெளிப்பட தவறுவதில்லை.

தாய்மொழியை பாதுகாப்பதும் முதலமைச்சர் குறிப்பிடும் திராவிட மாடலின் அங்கம் என்பதால் இந்தி திணிப்புக்கான அறிகுறிகள் தென்படும்போதெல்லாம் அதற்கு எதிராக கிளர்ந்து எழுந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரையில் இந்தி திணிப்பிற்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது.

இதையடுத்து அந்த பரிந்துரையை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ”இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது” எனக் கண்டித்த மு.க.ஸ்டாலின், ”இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப்பார்க்க வேண்டாம்” என மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். அவரது இந்த எச்சரிக்கை இந்தி திணிப்பிலிருந்து தமிழை மட்டுமல்லாது பிற  பிராந்திய மொழிகளையும் பாதுகாக்க விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்பட்டு தேசிய அளவில் பாராட்டுக்களைப் பெற்றது. முதலமைச்சரின் இந்த எச்சரிக்கையின் வீரியம் எத்தகையது என்பதை நிரூபிக்கும் வகையில் திமுக இளைஞரணி சார்பில்  பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தினார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த ஆண்டு சட்டப்பேரவையில் திராவிட மாடல் என்கிற வார்த்தைக்கு சோதனை ஏற்பட்டபோது அதனை  தடுத்து நிறுத்தி நிவர்த்தி செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆண்டின் தொடக்க கூட்டம் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது அரசு தயாரித்துக்கொடுத்த உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்தார். இதனை கண்டித்தும் அரசு தயாரித்த உரையே முழுமையாக அவைக் குறிப்பில் ஏறும் வகையிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். இதனால் எரிச்சல் அடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியகீதம் பாடப்படும் முன்பே அவையைவிட்டு வெளியேறினார். பின்னர் இந்த நிகழ்வுகள் குறித்து தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில்,  சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் சுயமரியாதையை திராவிட மாடல் அரசு நிலைநாட்டியுள்ளதாக  கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும்போதுகூட திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றுதான் இந்த வெற்றி எனக் கூறி  மகிழ்ந்தார்.

திராவிட மாடல் என்கிற சக்கரத்தின் அச்சாணியாக விளங்குவது சமூநீதி. அந்த சமூகநீதியை உறுதிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு கோரி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். பிற மாநில முதலமைச்சர்கள் நீட் தேர்வு எதிர்ப்பினை கைவிட்டபோதிலும் மு.க.ஸ்டாலின் அந்த தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்.

சமூகநீதியை தேசமெங்கும் உறுதி செய்யும் நோக்கத்துடன் கடந்த ஆண்டு அவர் “அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பை” தொடங்கினார். அந்த கூட்டமைப்பில் இணையுமாறு சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார், அரவிந்த் கெஜ்ரிவால், உள்ளிட்ட 37 கட்சிகளின் தலைவர்களுக்கு  அவர் கடிதம் எழுதினார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் அந்த பட்டியலில் அடங்கியிருந்தது அரசியல் எல்லைகளை கடந்து சமூகநீதிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராடி வருவதை உணர்த்தியது. ”அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதிசெய்வதன் வழியாகத்தான் நமது அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தைக் கட்டியமைக்க முடியும். இந்தியாவில் சமூக நீதி கருத்தியலை முன்னெடுத்துச் செல்ல, சமூக நீதி கூட்டமைப்பு முயற்சி செய்யும்” என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதும் திராவிட மாடலின் ஒரு அங்கமான கூட்டாட்சி தத்துவத்தை மத்திய பாஜக அரசுக்கு நினைவூட்டுவதற்குதான் என கூறும் திமுகவினர், முதலமைச்சரின் ஒவ்வொரு அசைவும் திராவிட மாடலை பின்பற்றியே அமைவதாக கூறுகின்றனர். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் தொடங்கி அனைத்து ஜாதிகளையும் சேர்ந்தவர்களை அர்ச்சகர்களாக நியமித்ததுவரை முதலமைசசர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய ஏராளமான திட்டங்களும் திராவிட மாடலின் வெளிப்பாடுதான்.

அனைவருக்கும் சமமான கல்வி உரிமை கிடைக்க வேண்டும் அதன் மூலம் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று நீதிக்கட்சி காலத்திலிருந்தே தோன்றிய திராவிட சித்தாந்தின் அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  வறுமையும் பட்டினியும் கல்விக்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக காலைச் சிற்றுண்டி திட்டத்தை அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். பெண்கள் உயர் கல்வி பயில்வதை ஊக்குவிக்க,  அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வி படிக்கச் செல்லும்போது மாதம் தோறும் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டம் மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் திராவிட மாடல் ஆட்சியின் சீரிய திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவியருக்கு மருத்துவக் கல்வியில் 7.5  சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலையில் என்ஜினியரிங்  உள்ளிட்ட பிற தொழில் படிப்புகளுக்கும் அதனை  விரிவுபடுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் இந்த திட்டத்தின் கீழ் தொழிற்படிப்புகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டு மாணவ- மாணவிகளை மகிழ்ச்சியில் திழைக்கவைத்தார். 7.5 சதவீத இடஒதுக்கீடு  சட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் உறுதி செய்தபோது  திராவிட மாடல் அரசின் சமூக நீதிப் பயணத்திற்கு 10  மாதங்களில் கிடைத்த மூன்றாவது வெற்றி என அந்த தீர்ப்பை கொண்டாடினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் முதலமைச்சர் எப்போதும் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்கிற திராவிட மாடல் கொள்கைப்படி தற்போது கள ஆய்வில் முதலமைச்சர் என்கிற திட்டத்தையும் தொடங்கி நலதிட்ட பணிகள் முறையாக மக்களை சென்றடைகிறதா என அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

“எனது அரசு” அல்லது “எங்கள் கட்சியின் அரசு” என முதலமைச்சர்கள் கூறுவதையே பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்கும் மக்களுக்கு, திராவிட மாடல் அரசு என ஒரு தத்துவத்தின் அரசாக தமது அரசை பொதுமைப்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுவது கவர்ந்திருப்பதாகக் கருதப்படுகிறது. 2024ம் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய அளவில் முக்கிய பங்கினை வகுப்பார் என்றும் அவர் முன்னிறுத்தும் திராவிட மாடல் நாடெங்கிலும் பேசு பொருளாகும் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன.

-எஸ்.இலட்சுமணன்

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீட் விலக்கு மசோதா ; ஜார்ஜ் கோட்டையில் இன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.

Halley Karthik

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா உறுதி

G SaravanaKumar

ஆப்கானிஸ்தானின் கந்தகாரை கைப்பற்றிய தலிபான்கள்

G SaravanaKumar