அதிமுக மட்டுமின்றி மேலும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகும் என சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (செப்டம்பர் 25) நடைபெற்ற மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. இந்த நிலையில், அதிமுக மட்டுமின்றி மேலும் பல கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜவிலிருந்து விலகும் என சிவசேனாவைச் சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:
நாங்கள் இந்தியா கூட்டணியை அமைத்த பிறகே அவர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து ஞாபகம் வந்துள்ளது. அதற்கு முன்பு வரை மோடி மட்டும் போதும் என அவர்கள் இருந்தார்கள். ஆனால், இந்தியா கூட்டணி அமைந்த பிறகு அவர்களுக்கு மோடி ஒருவர் மட்டும் போதவில்லை. அவர்களுக்கு மேலும் பலரின் ஆதரவு தேவைப்பட்டது.
சிவசேனா மற்றும் அகாலி தளம் இல்லாத தேசிய ஜனநாயக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியே இல்லை. சிவசேனா மற்றும் அகாலி தளம் தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மையான பலமாக இருந்தது. இப்போது இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவிழந்துள்ளது. அதிமுக மட்டுமல்லாது மேலும் பல கட்சிகள் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவும் மூழ்கிவிடும் என்றார்.