தமிழக அரசின் வெள்ள மீட்புப் பணியில் ஆறு குழுக்களும், மத்திய அரசின் பேரிடர் மீட்புப் பணிகளில் 5 குழுக்களும் என மொத்தம் 312 பேர் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்காசி செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மதுரை விமானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது வெள்ள நிலவரங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு நிகழ்வும் முதல்வரின் நேரடி ஆய்வுக்குள்ளாக உள்ள காரணத்தால் தற்போது காவேரி மற்றும் அதை சார்ந்த ஆறுகளில் இருந்து வருகிற தண்ணீர் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த சில நாட்களாக இரண்டு லட்சம் கனஅடியாக இருந்த காவேரி உபரி நீர் தற்பொழுது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. மேலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தஞ்சை, மயிலாடுதுறை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 1,327 குடும்பங்களைச் சார்ந்த 4,035 பேர் 49 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு சார்பில் உரிய வசதிகள் செய்து தரப்படுகின்றன. அதுபோக மாநில பேரிடர் மீட்புப் படையில் இருந்து திருச்சி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய இடங்களில் 212 பேர் ஆறு மாவட்டத்தில் உள்ளனர். என்டிஆர்எஃப் குழுவினர் 110 பேர் சேர்த்து 312 பேர் தயார் நிலையில் உள்ளனர். வெள்ள நிலவரம் கட்டுப்பாட்டில் உள்ளது. காவிரி ஆறு செல்லும் மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு வெள்ளம் மற்றும் மீட்பு பணியைப் பார்வையிட்டு கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உபரி நீரை சேமிக்க புதிய தடுப்பணைகள் கட்டப்படுமா என்ற கேள்விக்கு, கர்நாடகாவில் மழை பெய்து வரும் வெள்ளத்தை தடுத்து நிறுத்தும் அளவிற்கு தடுப்பணை கட்டும் எண்ணம் தற்போதைக்கு அரசுக்குத் திட்டம் இல்லை. எதிர்காலத்தில் இதையெல்லாம் மனதில் வைத்து எந்தெந்த வருடங்களில் வெள்ளங்கல் வந்துள்ளது என்பதை சரி பார்த்து அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை முதல்வர் எடுப்பார். அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டது போல கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதா என்ற ஆர்பி உதயகுமார் கேள்விக்கு, எல்லா இடங்களுக்கும் காவிரி செல்கின்ற மாவட்டங்களுக்குத் தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக அனுப்பப்பட்டுள்ளனர்.
அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் குறித்த கேள்விக்கு, அரசு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது நோக்கம். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது குடியிருப்பு பிரச்சனைகள் வருகிறது. அதை மனிதாபிமானத்தோடு கவனத்தில் வைத்துக் கொண்டு அவர்களை அப்புறப்படுத்தி அதை அரசாங்கம் கையகப்படுத்தி வருகிறது. மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்த கேள்விக்கு, அதற்கான பணிகளை அரசு மும்முரமாகச் செய்து வருகிறது. மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக வர வேண்டும் என்று தென் மாவட்ட மக்களுக்கு ஆசை இருக்கிறது. அந்த ஆசையை முதல்வர் நிறைவேற்றுவார் என்றார்.
-ம.பவித்ரா