வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்கள் – ஆய்வு செய்ய மத்திய குழு வருகை!

தென்மாவட்டங்களில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெல்ல சேதத்தை பார்வையிட மத்திய குழுவினர் மதுரை வந்தடைந்தனர். குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித்…

தென்மாவட்டங்களில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெல்ல சேதத்தை பார்வையிட மத்திய குழுவினர் மதுரை வந்தடைந்தனர்.

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லக்கூடிய பிரதான சாலை முழுவதுமாக வெள்ள நீரில் சூழப்பட்டுள்ளது. அங்கு மக்கள் ஜேசிபி வாகனத்தில் மீட்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்றாலும் அனைத்து மக்களுக்கும் இன்னும் உதவிகள் சென்று சேராத நிலையே நீடிக்கிறது.

இந்நிலையில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெல்ல சேதத்தை பார்வையிட மத்திய குழுவினர் மதுரை வந்தடைந்துள்ளனர். தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகரான கர்னல் கே.பி.சிங் தலைமையில் மத்திய பொதுப்பணித்துறை மற்றும் தேசிய நீர்வளத்துறை அமைச்சகத்தை சேர்ந்த இயக்குனர் தங்கமணி, ஹைதராபாத்தில் உள்ள மத்திய விவசாய கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு இயக்குனர் பொன்னுச்சாமி உள்ளிட்ட ஐவர் குழுவினர் இரவு 9:30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.

பின்னர் இவர்கள் கார் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.