இன்ஸ்டாகிராம் செயலியில் பிளிப்சைடு அம்சத்தைக் கொண்டுவர சோதனை நடைபெறுவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ ஆடம் மொசேரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டில் துவக்கப்பட்ட இன்ஸ்டா தற்போது உலகின் மிக பிரபலமான சோஷியல் மீடியா ஆப் ஆக இருந்து வருகிறது. சோஷியல் மீடியாக்களின் உலகத்தில் ஃபோட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை ஷேர் செய்ய உதவி இன்ஸ்டா ஒரு தவிர்க்க முடியாத பிளாட்ஃபார்மாக இருந்து வருகிறது. யூஸர்கள் தங்களின் கலைப்படைப்புகளை காண்பிப்பது முதல் நடனம் மற்றும் பாடும் திறன்கள் வரை பல திறமைகளை வெளிப்படுத்த இன்ஸ்டா உதவுகிறது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பிரபல சோஷியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் அதன் யூஸர்களுக்காக தொடர்ந்து பல புதிய அம்சங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் பிளிப்சைடு (Flipside) என்ற அம்சத்தைக் கொண்டுவர சோதனை நடைபெறுவதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆடம் மொசேரி கூறியுள்ளார். இந்த சோதனை அம்சம் பயனர்கள் தங்கள் தனிப்பட்ட கணக்குகளை finstas கணக்குகளாக மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது.
முதன்முதலில் பிளிப்சைடு அம்சத்தை உருவாக்கும் முயற்சியை இன்ஸ்டாகிராம் நிறுவனம் 2023 இல் தொடங்கியது. ஆனால் அந்த நேரத்தில், இது இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் உள் பயன்பாட்டுக்கு மட்டுமே என்று கூறியது. இப்போது பயனர்களின் கருத்தையும் பெறுவதற்காக பீட்டா சோதனையைத் தொடங்கி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயனர்களின் கருத்தைப் பெற்று சோதனை செய்தாலும் இந்த அம்சம் பொது பயன்பாட்டுக்கு வரும் என்பது நிச்சயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஃபின்ஸ்டாஸ் என்பது நெருங்கிய நண்பர்களுக்காக மட்டும் உருவாக்கப்படும் தனிப்பட்ட கணக்கு என்றும் சமூக ஊடக தளங்களில் பெற்றோரின் மேற்பார்வையைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாகவும் இந்தக் கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







