முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

பிளாஷ்பேக்: ’ட்யூனை சுட்டுட்டாங்க…’பாட்டுக்காக நடந்த பரபர வழக்கு!

சினிமாவில் கதைத் திருட்டுப் பஞ்சாயத்து, இன்று நேற்றல்ல, சினிமா தொடங்கிய காலங்கட்டங்களிலேயே ஆரம்பித்துவிட்டது. சில கதைப் பிரச்னைகள் நீதிமன்றம் வரை சென்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறது அந்த காலத்தில். இது ஒரு பக்கம் இருந்தாலும் பாடல் பஞ்சாயத்துக்காகவும் நீதிமன்ற படி ஏறி இருக்கிறது ஒரு படம்!

ஜெமினி கணேசன், அஞ்சலிதேவி, டி.எஸ்.பாலையா, கிரிஜா, தங்கவேலு, டி.எஸ்.துரைராஜ். எஸ்.வி.சுப்பையா உட்பட பலர் நடித்த படம், ’காலம் மாறி போச்சு’. 1952-ல் வெளியான இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் டி.பி. சாணக்யா இயக்கினார். கமல் கோஷ் ஒளிப்பதிவு. இவர், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ், தெலுங்கு சினிமாவில்தான் அதிகம் பணியாற்றி இருக்கிறார். சாவித்ரி நடித்த பரோபகாரம், ரங்காராவ் நடித்த ரோகிணி ஆகிய படங்களை, இயக்கியும் இருக்கிறார்.

’காலம் மாறி போச்சு’ படத்துக்கு வசனம் எழுதியவர் முகவை ராஜமாணிக்கம். சுதந்தரப் போராட்ட வீரர். பிறகு கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக இருந்தார். முழுக்க கிராமங்களில் நிஜமான விவசாயிகளை நடிக்க வைத்து எடுக்கப்பட்ட படம்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்னைகளை, காதலுடன் அழுத்தமாகச் சொன்ன படம் இது. இதற்கு இசை அமைத்தவர் மாஸ்டர் வேணு (இவர் நடிகர் பானுசந்தரின் தந்தை). இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் அப்போது சூப்பர் ஹிட்.

கள்ளம் கபடம் தெரியாதவனே
உலகம் போவது புரியாதவனே
ஏறுபூட்டி போவாயே
அண்ணே சின்னண்ணே -உன்
துன்பமெல்லாம் தீருமே
அண்ணே, சின்னண்ணே’ என்ற பாடல் அப்போது அதிக வரவேற்பை பெற்றது. முகவை ராஜமாணிக்கம் எழுதி இருந்தார்.

அப்போது இந்தி சினிமாவில், டாப்பில் இருந்த வஹிதா ரஹ்மான் இந்தப் பாடலுக்கு ஆடியிருந்தார். (இந்த வஹிதா, செங்கல்பட்டில் பிறந்து வளர்ந்தவர். எம்.ஜி.ஆரின் ’அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்திலும் ’சலாம் பாபு சலாம் பாபு’என்ற பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார்).

இந்தப் படத்தின் ரிலீஸுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு வெளியானது எம்.ஜி.ஆரின் ’மதுரை வீரன்’! அந்தப் படத்தில், ’சும்மா கிடந்தா, சோத்துக்கு கஷ்டம்’ என்ற பாடல் ஹிட்டானது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியிருந்தார். இசை அமைத்தவர் ஜி.ராமநாதன். பாடலுக்கு லலிதா, ராகிணி நடனம் ஆடியிருந்தனர். இரண்டு படத்தின் நடனமும் ஒன்று போலவே இருக்கும்.

இந்த, ’சும்மா கிடந்தா…’ பாடலும், ’காலம் மாறிப் போச்சு’ படத்தின் ’ஏறு பூட்டிப் போவாயே’பாடலும் ஒரே ட்யூன். அதிர்ச்சி அடைந்த ’காலம் மாறிப்போச்சு’ விநியோகஸ்தர் ஏவி.எம் செட்டியார், அந்த பாடலால் தமது படத்துக்கு நஷ்டம் வந்துவிடுமோ என்று பயந்து வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த ட்யூன் நாட்டுப்புறப் பாடலில் இருந்து எடுக்கப்பட்டது என்பதால், இந்த இசைக்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று தீர்ப்பளித்து, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

-ஏக்ஜி

Advertisement:
SHARE

Related posts

தலைமைச் செயலகத்தில் புதுப்பொலிவுடன் தயாராகும் மு.க.ஸ்டாலின் அறை!

Halley karthi

அமேசானின் சி.இ.ஓ பதவியில் இருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ்

Gayathri Venkatesan

இந்தியாவின் பொறுமையை சோதிக்க வேண்டாம்; சீனாவுக்கு ராணுவத் தலைமை தளபதி நரவானே எச்சரிக்கை!

Saravana