ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்ததாக அளித்த புகாரை அடுத்து போலீசார் கவுதம் காம்பீர் எம்.பி வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அரசியலில் களமிறங்கினார். பாஜக சார்பில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர், கிழக்கு டெல்லி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்போது டிவி நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் தொடர்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் ’ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக டெல்லி போலீசில் நேற்றிரவு புகார் செய்துள்ளார். கவுதம் காம்பீர் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில், காம்பீருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து ஐஎஸ் காஷ்மீர் என்ற பெயரில் இமெயில் வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை மத்திய டெல்லி இணை போலீஸ் கண்காணிப்பாளர் ஸ்வேதா சவுகான் தெரிவித்தார்.








