விராலிமலை அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் தந்தையின் கண் முன்னே சகதியில் சிக்கி மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பாக விராலிமலை சுற்றுப் பகுதியில் நடைபெறும்
மீன்பிடி திருவிழா என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அப்பகுதி குளங்களில் மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை குளங்களில் சேமித்து வைத்து நெல் அறுவடை காலங்கள் முடியும் தருவாயில். குளத்து நீரும் வற்றி சிறிதளவே இருக்கும்போது குளத்தில் இருக்கும் மீன்களை பொதுமக்கள் ஒன்று திரண்டு பிடித்துக் கொள்ளும் நிகழ்வுக்கு பெயர்தான் மீன்பிடித் திருவிழா என்று கூறப்படுகிறது. விராலிமலை சுற்றுப் பகுதியைப் பொறுத்தவரை இதுவரை அறுபதுக்கும்
மேற்பட்ட குளங்களில் மீன்பிடித் திருவிழா நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், இன்று விராலிமலை அருகே உள்ள கல்குடி பெரியகுளத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் விராலிமலை அருகே உள்ள சூரியூர் எழுவம்பட்டியைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது மகன் தங்கவேல் (20) கலந்துகொண்டனர். இருவரும் குளத்துக்குள் இறங்கி மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தபோது தங்கவேல் ஆழமான பகுதிக்குட் சென்று மீன்களைப் பிடிக்க முயன்றுள்ளார்.
அப்போது, கால்கள் சகதியில் சிக்கி நீரில் மூழ்கி மூச்சுத் திணறியுள்ளார். இதைக் கண்ட அவரது தந்தை முருகன் அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார். உடனடியாக திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்களும் அவருடன் இணைந்து குளத்துக்குள் இருந்து தங்கவேலுவை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தங்கவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 60க்கும் மேற்பட்ட குளங்களில் நடத்தப்பட்ட மீன்பிடி திருவிழாக்களில் இதுபோல் எந்தவித அசம்பாவிதமும் நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
-ம.பவித்ரா