ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்துள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. அவரது மனைவி சந்திரா. இவர் வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை சந்திரா வழக்கம் போல் கடல் பாசி எடுக்கச் சென்றுள்ளார். அவர் மாலை வரை வீடு திரும்பாததால் அச்சம் அடைந்த அவரின் உறவினர்கள் வடகாடு கடல் பகுதியில் இரவு வரை தேடியும் சந்திரா குறித்து தகவல் எதுவும் கிடைக்காததால் சந்திராவின் கணவர் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, வடகாடு பகுதிக்குச் சென்ற நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சதீஷ் மாயமான சந்திராவை தேடிச் செல்லும்போது வடகாடு காட்டு பகுதியில் சந்திரா உயிரிழந்த நிலையில் அரைநிர்வாணமாக கிடந்துள்ளார். இதையடுத்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருடன் சென்ற ஊர் மக்கள் ஆத்திரம் அடைந்து இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர்.
மேலும், இறால் பண்ணையில் பணிபுரிந்த ஆறு வடமாநில இளைஞர்கள் மீதும் ஊர் பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, வடமாநில இளைஞர்கள் 6 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், 6 பேரில் பிரகாஷ், ரஞ்சன் ராணா என்கிற இருவர் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும், சம்பவம் நடைபெற்ற அன்று வன்முறையில் ஈடுபட்ட ஊர்மக்கள் 200 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.








