படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி – குவியும் பாராட்டுக்கள்..!

நீலகிரியில் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாகி அசத்தியுள்ளார். அது குறித்த தொகுப்பை அலசுகிறது இந்த தொகுப்பு. நீலகிரி பூர்வகுடி மக்களான படுகர் இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு…

நீலகிரியில் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாகி அசத்தியுள்ளார். அது குறித்த தொகுப்பை அலசுகிறது இந்த தொகுப்பு.

நீலகிரி பூர்வகுடி மக்களான படுகர் இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான
கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கடைப்பிடித்து வாழ்ந்து
வருகின்றனர். படுகர் இன மக்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற
நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். பொதுப் பிரிவு
பட்டியலில் உள்ள இவர்கள் தங்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க வேண்டும் என்று
நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த படுகர் சமுதாயத்தை சேர்ந்த பலர்
கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் காலூன்றி வருகின்றனர். அந்த
வகையில் நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாயத்தை சேர்ந்த இளம் பெண்
ஒருவர் முதல் முறையாக விமானியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் நீலகிரி
மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள நெடுகுளா குருக்கத்தி பகுதியை சேர்ந்த மணி
கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர், இவருடைய மனைவி மீரா.

இவர்களுடைய மகளான ஜெயஸ்ரீ தான் தற்போது நீலகிரி படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்வாகியுள்ளார். இவர் பள்ளி படிப்பை கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் முடித்தார். இதன் பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்த இவர் சில காலம் ஐடி துறையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அதன் பின்னர் விமானியாக ஆக வேண்டும் என்று முடிவு செய்து பைலட் பயிற்சி
முடித்து தற்போது விமானியாக சேர்ந்துள்ளார். இதற்காக தென்னாப்பிரிக்காவில்
விமான பயிற்சி எடுத்துக்கொண்டார். படுகர் சமுதாயத்தில் பெண் ஒருவர் படிப்பை
முடித்து இது போன்ற துறையில் நுழைந்து இருப்பது படுகர் சமுதாயத்தை சேர்ந்த
மற்றவர்களுக்கு ஒரு தூண்டுகோளாக உள்ளது.

இதுகுறித்து ஜெயஸ்ரீ தெரிவித்ததாவது..

” தற்போதைய, காலகட்டத்தில் எங்களது சமுதாயத்தில் அண்டை மாவட்டம் மாநிலங்களுக்கே படிக்க அனுப்ப தயங்குகிறார்கள், அப்படிப்பட்ட சூழ்நிலையில் மற்றொரு நாட்டுக்கு விமான பயிற்சி பெற தைரியமாக எனது பெற்றோர் என்னை அனுப்பி வைத்தனர். அதேபோல் பெண் குழந்தைக்கு இவ்வளவு செலவு தேவையா என்று பலர் கேள்வி கேட்டபோது பெண் குழந்தைக்கு தான் இவ்வளவு செலவு தேவை என்று என் பெற்றோர்கள் கூறுவார்கள்.

பொதுவாக விமானி என்றால் ஊர் சுற்றும் வேலை என்று அனைவரும் நினைப்பார்கள்.
ஆனால் வழக்கமான வேலைகளை விட விமான வேலையில் சவால்கள் அதிகம் உள்ளது. மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை மனநிலை பரிசோதனைகள் நடைபெறும் அதில் தேர்வு பெறவில்லை என்றால் பணியை இழக்க நேரிடும்.

எனவே உடல்நிலை மற்றும் மனநிலையை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். மன தைரியம் அதிகளவில் இருக்க வேண்டும். இப்படி ஒரு வேலைக்கு நான் வர காரணம் எனது ஆரம்பகால பள்ளி படிப்பும் அங்கிருந்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் முக்கிய காரணமாகும். எங்கள் சமுதாயம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் விமானியாக உருவாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் இத்துறையில் சாதிக்க வேண்டுமென லட்சியத்துடன் படிக்கும் மாணவர்களின் இப்படிப்பில் ஏதாவது சந்தேகங்கள் ஏற்பட்டால் அவற்றை வழங்கி உதவி செய்வேன் என கூறினார்

பின்னர் அவரது பெற்றோர் மீரா கூறுகையில், சிறுவயது முதலே ஜெயஸ்ரீ க்கு விமானி
ஆக வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது, ஆனால் அவரது பள்ளி,கல்லூரி பயிலும்
போது அவருக்கு முடிந்தவரை நாங்கள் உதவி செய்தோம். அதேபோல் எங்களது
சமுதாயத்தில் தற்போது முதல் பெண் விமானியாக தேர்வாகியுள்ளது எங்களுக்கு
மிகவும் சந்தோஷமாக உள்ளது என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.