ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் 2023-க்காக பிரத்யேகமாக பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்படி உலகமே திரும்பி பார்க்கும் வகையில் என்னதான் செய்யப்பட்டிருக்கிறது… இதோ உங்களுக்காக….
#HockeyIsBack – #VanakkamAsia – #HACT2023 – #IndiaKaGame – #GoalPodu – #SportsTn
இப்போல்லாம் இதான் டிரெண்ட்…
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
16 ஆண்டுகளுக்கு பிறகு ஏசியன் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, தென் கொரியா மற்றும் மலேசியா என 6 நாடுகள் பங்கேற்கும் இந்த மெகா ஹாக்கி திருவிழாவானது வேற லெவலில் நடைபெறப்போகிறது என்று தான் சொல்ல வேண்டும். சென்னையில் தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவுற்று, போட்டிகளை நடத்த தயாராகி விட்டது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை போட்டிகளை நடத்தி முடிக்க ஹாக்கி இந்தியா திட்டமிட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஏசியன் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுவதை அடுத்து, மைதானத்தினை புணரமைக்கும் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வந்தது.
உலக ஹாக்கி அரங்கங்களில் தனிச்சிறப்பு மிக்க முதல் ஆடுகளம்
ரூ.19 கோடி செலவில் மைதானத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் தான் இப்போது உலகெங்கிலும் டிரெண்டிங். பொதுவாகவே ஒவ்வொரு ஒலிம்பிக் தொடருக்கும் புதிய ஆடுகளங்களுடன் ஆடுவது வழக்கம். எனவே அடுத்த ஆண்டு பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரின் ஹாக்கி போட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள ஹாக்கி ஆடுகளத்தை அதற்கு முன்னதாகவே பயன்படுத்தும் பெருமையை பெற்றுவிட்டது சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானம்.
பாலிகிராஸ் எனப்படும் இந்த நவீன ஹாக்கி ஆடுகளமானது கரும்பின் மூலக்கூறுகளை கொண்டு தயாரிக்கப்பட்டதே ஆகும். ஏற்கனவே இருந்த ஆடுகளத்தை ஒட்டுமொத்தமாக மாற்ற முடிவு செய்த தமிழ்நாடு அரசு, மேம்பாட்டு பணிகளுக்காக தனியாக நிதி ஒதுக்கி இந்த ஆடுகளத்தை மாற்றியுள்ளது. கரும்பினுடைய சக்கையில் இருக்கும் மூலக்கூறுகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆடுகளத்திற்கு மற்ற ஆடுகளங்களில் ஊற்றப்படும் நீரின் அளவை விட 30 சதவிகிதம் குறைவாக ஊற்றினாலே போதுமானது. இதனால் 30 சதவிகிதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. மேலும் இதன் பராமரிப்பு செலவு என்பது மற்ற ஆடுகளங்களை விடவும் 40 முதல் 45 சதவிகிதம் குறைவாகவே இருக்கக்கூடும்.
விளையாடும் வீரர்களுக்கு காயம் ஏற்படாத வகையிலான மென்மையான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில், விளையாட்டின் போது கை கால் முறிவு ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு கிடைப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. எனவே இத்தகைய சிறப்புகளை கொண்ட இந்த ஆடுகளம் உலகிலேயே முதல் முறையாக சென்னையில் தான் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டும் இன்றி இந்த தொடருக்காகவே மைதானத்தின் அனைத்து அறைகளும் மறு சீரமைப்பு செய்யப்பட்டு, மின் விளக்குகள் மாற்றப்பட்டு கிட்டத்தட்ட 7500 இருக்கைகளும் மாற்றியமைக்கப்படுள்ளன.
புறாக்களின் இருப்பிடமாக விளங்கிய பார்வையாளார்கள் இருக்கைகளின் நிழற்குடைகள் அனைத்தும் தற்போது புறாக்கள் உட்புகாத வண்ணம் பாதுகாப்பான முறையில் வலையமைக்கப்பட்டுள்ளன. மைதானத்தின் எல்லா பகுதிகளிலும் வணக்கம் ஆசியா, இந்தியா கா கேம், கோல் போடு உள்ளிட்ட ஹாஸ்டாக்குகளுடன் கூடிய பதாகைகளும், இருக்கைகளில் தமிழ்நாடு மற்றும் எஸ் டி ஏ டி எனவும் எழுதப்பட்டுள்ளன.
டிக்கெட் பாக்ஸ் கவுண்டர்கள்
போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தின் நுழைவாயில் அருகே பாக்ஸ் கவுண்டர்களுடன் கூடிய டிக்கெட் விற்பனை மையங்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கி வருகிறது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பொம்மன்
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருவதில் தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டுவது மட்டுமல்லாமல், இந்த ஹாக்கி தொடரின் அதிகாரப்பூர்வ சின்னமாக சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற தி எலிபண்ட் விஸ்பர்ஸ் ஆவண படத்தின் நாயகன் பொம்மன் பெயரில் யானை உருவம் கொண்ட சின்னம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒடிசாவில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் போது தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா சென்று புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள பிர்சா முண்டா மைதானத்தை பார்வையிட்டிருந்ததை அடுத்து தமிழ்நாட்டிலும் இதுபோல சர்வதேச போட்டிகள் நடத்தப்பட் வேண்டும் என திட்டமிட்டிருந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதன்படி எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடக்கவிருப்பது தமிழ்நாடு விளையாட்டுத் துறையின் அடுத்தடுத்த வளர்ச்சிகளுக்கு வழிவகுக்கிறது.
நான்காவது சாம்பியன் யார்?
இதுவரை இந்தியா 2011, 2016 மற்றும் 2018 ஆகிய வருடங்களும். பாகிஸ்தான் அணி 2012, 2013 மற்றும் 2018 ஆகிய வருடங்களும் சாம்பியன் பட்டம் வென்று தலா மூன்று முறை வெற்றி பெற்றுள்ளனர். 2018 ஆம் ஆண்டு இரு அணிகளுக்கும் கோப்பையானது பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி எது என்ற எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. இந்த தொடரின் நடப்பு சாம்பியனாக தென் கொரியா தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.