இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடக்கிறது.
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்க உள்ளது.
இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காராக அதிரடி வீரர் இஷான் கிஷனுடன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில் இறங்குவார்கள். மிடில் வரிசையில் துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் பலம் சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
ஆசிய சாம்பியனான இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. பதும் நிசாங்கா, ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, குசல் மென்டிஸ், சுழற்பந்து வீச்சாளர் வானிந்து ஹசரங்கா என்று அந்த அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
மும்பை மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 8-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
இந்த போட்டியில் இந்திய அணியில், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கை அணியில், பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா, தில்ஷன் மதுஷன்கா, லாஹிரு குமாரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.







