கடலூரில், முதல் தலைமுறையாக பள்ளியில் சேர்க்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 4 மாணவர்களை, மாநகராட்சி மேயர் உற்சாகமாக வரவேற்றார்.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் ரெட்டிச்சத்திரம் தெருவில் மாநகராட்சி
நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று கொண்டிருந்தது.
நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் பள்ளியில் சேர்வதற்காக
வந்திருந்தனர். அவர்கள் 4 பேரையும் மாநகராட்சி மேயர் உற்சாகமாக வரவேற்று,
அவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி அவர்களை அழைத்துச்சென்று
வகுப்பறையில் அமர வைத்து, நன்றாக படிக்க வேண்டுமென அறிவுரை வழங்கினார்.
மேலும், அவர்களின் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும்
வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இப்பள்ளியில் சேர்க்கப்பட்ட சிவகார்த்திகேயன் என்ற மாணவன் ஒன்றாம் வகுப்பும்,
விஷால் என்ற மாணவன் இரண்டாம் வகுப்பும், சந்தோஷ் என்ற மாணவன் மூன்றாம்
வகுப்பும், கணேஷ் என்ற மாணவன் நான்காம் வகுப்பும் தங்களின் வயது அடிப்படையில்
சேர்க்கப்பட்டனர். இவர்கள் இதுவரை பள்ளிக்கு செல்லாமல் தங்களின் பெற்றோருடன்
வியாபாரத்திற்கு உதவி செய்து வந்த நிலையில், முதல் முறையாக அவர்களின்
குடும்பத்தில் இருந்து கல்வி பயில பள்ளியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கு. பாலமுருகன்







