இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது. இரண்டு இந்திய செயற்கைகோள்களையும் சுமந்து செல்கிறது.
விண்வெளி வர்த்தகத்தில் உலகளாவிய சந்தைப் போட்டியைச் சமாளிப்பதற்காக ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக 2020-ம் ஆண்டு இன்ஸ்பேஸ் (Inspace) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் ராக்கெட், செயற்கைக்கோள் தயாரித்தலில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டன. அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் எனும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஓராண்டுக்கும் மேலாக ராக்கெட் தயாரிப்பு பணிகளில் ஸ்கைரூட் ஈடுபட்டு வந்தது. வெவ்வேறு எடைகளைச் சுமந்து செல்லக்கூடிய 3 விதமான ராக்கெட்கள் வடிவமைக்கப்பட்டன. அதற்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டது. அதில் சுமார் 480 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடிய ‘விக்ரம் எஸ்’ ராக்கெட்டை சோதனை முயற்சியாக விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே கடந்த நவம்பர் 15-ம் தேதி ராக்கெட் ஏவுதலுக்கு தயாரான நிலையில் மோசமான வானிலை காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது பருவநிலைச் சூழல்கள் சுமுகமாக இருப்பதால் விக்ரம் எஸ் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த ராக்கெட்டுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு வடிவமைத்த 3 ஆய்வு சாதனங்களும் சேர்த்து அனுப்பப்பட உள்ளன. அவை புவி மேற்பரப்பிலிருந்து 120 கி.மீ. உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து பல்வேறு தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தயாரித்த ராக்கெட்களை விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.