சுமார் 24 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் டயனோசர்கள் வாழ்ந்ததை தற்போது யாராவது லைவ்வாக பார்த்துக்கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். ஆனால் கற்பனைக்கு எட்டாத இதுவும் நிகழ்ந்துகொண்டிருப்பதற்கு சாத்தியம் உள்ளது. எப்படி?
பூமியிலிருந்து பல்லாயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கேலக்சியில் அங்கம் வகிக்கும் கிரகத்தில் ஏலியன்கள் இருந்து அவர்களுக்கு பூமியை தொலை நோக்கிகள் மூலம் துல்லியமாக உற்று நோக்கும் வசதிகள் இருந்தால் அந்த ஏலியன்கள், டயனோசர்கள் பூமியில் நிகழ்த்தும் அட்டகாசங்களை நேலையாக பார்த்துக்கொண்டிருக்கலாம். காரணம் 24 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பூமியின் பிம்பத்தை பிரதிபலிக்கும் போட்டான்கள் தற்போதுதான் அங்கே சென்றடைந்திருக்கும்.
இதையே கொஞ்சம் தலைகீழாக சிந்தித்து பூமியிலிருந்து மனித குலம் விண்வெளியை உற்றுநோக்கி பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதை ஆராய்ந்தால் அது எவ்வளவு பிரம்மிப்பூட்டும் ஆராய்ச்சி. அந்த ஆராய்ச்சியைத்தான் மனிதகுலம் சார்பாக விண்வெளியில் தங்கியிருந்து செய்துவருகிறது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. பூமியிலிருந்து சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலை நிலா உள்ளது. ஆனால் அதையும் பல மடங்கு தாண்டி பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் சூரியனின் சுற்றுவட்ட பாதையில் சுழன்று வரும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, தனது ஆராய்ச்சியில் வெற்றிகரமாக முதல் மைல்கல்லையும் அடைந்துவிட்டது.
பிரபஞ்சம் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படங்களிலேயே மிகவும் துல்லியமான, அகச்சிவப்பு கதிர்களால் பதிவு செய்யப்பட்ட வண்ணப் புகைப்படம் ஜேம்ஸ் வெப்பால் எடுக்கப்பட்டு தற்போது நாசாவால் வெளியிடப்பட்ட புகைப்படம்தான். அதைவிட முக்கியம் பிரபஞ்சம் தோன்றியதாக கருதப்படும் காலத்திற்கு நெருக்கமான அதவாது தற்போதைய காலத்திலிருந்து 1300 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட, பிரபஞ்சத்தின் தொடக்க காலத்தில் உருவான விண்மீன் மண்டலங்களின் தொகுப்பை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்திருக்கிறது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எந்த அளவிற்கு காலம் கடந்து பயணித்து பிரபஞ்சத்தை பதிவு செய்திருக்கிறது என்பதை இன்னொரு கோணத்தில் விளக்கினால் பிரம்மிப்பு இன்னும் மேலோங்கும். நமது சூரிய குடும்பத்தில் உள்ள, நம்மால் வெறும் கண்ணால் பார்க்க முடிகிற சூரியன் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தொலைவை ஒரு ஆஸ்ட்ரோனோமிக்கல் யூனிட் என்பார்கள். ஒளி ஆண்டுகள் அளவீட்டில் சொல்லும்போது பூமியிலிருந்து 0.00001581 ஒளி ஆண்டு தொலைவில்தான் சூரியன் உள்ளது. இந்த தொலைவில் உள்ள சூரியனையே நாம் லைவ்வாக பார்க்க முடியாது. ஆம் ஒவ்வொரு முறையும் நாம் பார்ப்பது 8 நிமிடங்களுக்கு முந்தைய சூரியனைத்தான். சூரியனிடமிருந்து கிளம்பிய ஒளி 8 நிமிடங்கள் கழித்துதான் நம்மை வந்தடைகிறது. தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்துள்ள படத்தில் பூமியிலிருந்து சுமார் 2500 ஒளி ஆண்டுகள் தொலைவு வரை உள்ள நெபுலாவும் கேலக்சிகளும் பதிவாகியுள்ளன. இப்போது புரிந்துகொள்ள முடிகிறதா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பதிவு செய்துள்ள கேலக்சிகள் நமது சூரியனைவிட எந்த அளிவிற்கு தொலை தூரத்தில் உள்ளது என்பதையும், அதிலிருந்து கிளம்பும் ஒளி பூமியை அடைய இன்னும் எவ்வளவு காலம் ஆகியிருக்கும் என்பதையும். காலத்தை கடந்து பயணித்து அதனை முன்கூட்டியே பதிவு செய்துள்ளது ஜேம்ஸ் வெப்.
கற்றது கை மண் அளவு கற்காதது உலக அளவு என்ற ஔவையாரின் பாடலைப் போல், தற்போது எடுத்துள்ள படத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பதிவு செய்துள்ள பிரபஞ்சத்தின் அளவு, பூமியில் உள்ள மொத்த மணலின் அளவில் ஒரு கைப்பிடி மண் எவ்வளவோ அவ்வளவுதான். ஆனால் இன்னும் 20 ஆண்டுகள் விண்வெளியில் சுழலப்போகும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் படமே பிரபஞ்சத்தின் தொடக்கத்தை நெருங்கி செல்கிறது என்றால், அடுத்தடுத்து அந்த தொலைநோக்கி எடுக்கப்போகும் புகைப்படங்கள் எத்தனை புதிர்களுக்கு விடைசொல்லுமோ என நினைத்து பிரம்மிக்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.
பூமிதான் உலகம், பிரபஞ்சம் என்று நம்பிக்கொண்டிருந்த காலம் தொடங்கி, பூமியை போல் பல கிரகங்கள் அடங்கிய சூரிய குடும்பம் உள்ளது என கண்டறியப்பட்டு, பின்னர் 500 கோடி சூரிய குடும்பங்கள் அடங்கிய நமது பால்வெளிவீதி விண்மீன் மண்டலம்தான் இந்த பிரபஞ்சம் என நம்பப்பட்டு, பின்னர் அதையும் தாண்டி சிந்தித்து கோடிக்கணக்கான விண்மீன் மண்டலங்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளது என நிரூபிக்கப்படும் வரை விண்வெளி ஆய்வுகள் விரிவடைந்துகொண்டே வந்துள்ளன. அந்த ஆய்வை மிக வேகமாக அடுத்தக்கட்டத்திற்கு முன்னெடுத்துச்செல்லும் வாய்ப்பாகதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தற்போது எடுத்திருக்கும் புகைப்படங்கள் பார்க்கப்படுகின்றன.
பார்ப்பதற்கு ஆங்காங்கே வைரமோதிரங்கள் மின்னுவதுபோல் காணப்படும் ஜேம்ஸ் வெப் புகைப்படத்தில் தென்படுவது SMACS 0723 என்கிற விண்மீன் மண்டலங்களின் தொகுப்பு. பல லட்சம் விண்மீன் மண்டலங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள் இந்த தொகுப்பில் அடங்கியுள்ளன. பூமியிலிருந்து 2500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள NGC 3132 என்கிற நெபுலாவையும் தெளிவாக படம் பிடித்துள்ள ஜேம்ஸ் வெப், அழியும் தருவாயில் உள்ள நட்சத்திரம் ஒன்றிலிருந்து தூசு மண்டலங்கள், வாயுக்கள் வெளியேறுவதையும் துல்லியமாக படம் பிடித்துள்ளது. ஒரு நட்சத்திரம் எப்படி உருவாகிறது அதில் கிரகங்கள் எப்படி தோன்றுகின்றன என்பதை ஆய்வு செய்வதில் இந்த புகைப்படங்கள் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மனிதன் வாழ்வதற்கு தகுதியான கிரகம் வேறு எங்கேனும் உள்ளதா என்பதே விண்வெளி ஆராய்ச்சியில் நீண்ட காலமாக எழுப்பப்படும் முக்கிய கேள்வி. அந்த கேள்விக்கும் விடையை தருவதுபோல் ஒரு படத்தை பூமிக்கு பார்சல் செய்துள்ளது ஜேம்ஸ் வெப், பூமியிலிருந்து 1150 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் WASP 96-b என்கிற பிரம்மாண்ட வாயு கிரகத்தின் மேல் மேகக் கூட்டங்கள் தென்படுவதையும் ஜேம்ஸ் வெப் பூமிக்கு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு அத்யாவசியமான தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளும் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வளவையும் சாத்தியமாக்கிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்வெளியில் நிலைநிறுத்துவது ஒன்றும் எளிதில் சாத்தியமாகிவிடவில்லை. கிட்டதட்ட ஒரு மாநிலத்தின் வருடாந்திர பட்ஜெட் மதிப்பு அளவிற்கான செலவு செய்யப்பட்டுள்ளது. ஜேம்ஸ் வெப்பின் விண்வெளி பயணத்திற்கு செலவிடப்பட்ட தொகை இந்திய மதிப்பில் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய். உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியாக பிரபஞ்சத்தை ஆராய்ந்துகொண்டிருந்த ஹப்புல் தொலைநோக்கி தனது செயல் திறனை இழந்தபோது. அடுத்து பிரபஞ்சத்தின் காலத்திற்கும், தூரத்திற்கும் ஈடுகொடுக்கும் அதிநவீன தொலைநோக்கி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் களம் இறங்கியுது. அதனுடன் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையமும், கனடா விண்வெளி ஆராய்ச்சி மையமும் கைகோர்த்தன. அமெரிக்கா நிலவிற்கு மனிதனை அனுப்பியபோது நாசாவின் தலைவராக இருந்த ஜேம்ஸ் வெப்பின் பெயர் அந்த தொலைநோக்கிக்கு சூட்டப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், Ariane 5 ECA(VA256) ராக்கெட் மூலம் தனது விண்வெளிப் பயணத்தை தொடங்கிய ஜேம்ஸ் வெப், பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் சூரியனின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இதுவரை மனிதகுலம் காணாத பிரபஞ்சத்தின் மறுபக்கத்தை பிரதியெடுத்து பூமிக்கு அனுப்பியிருக்கிறது ஜேம்ஸ் வெப். பிரபஞ்ச ரகசியத்தை அறியும் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் புகைப்படத்தை வெளியிட்டு தனது கருத்தை பதவிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அறிவியல் உலகின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு இது என பெருமிதம் தெரிவித்தார். அமெரிக்காவின் அறிவியல் தலைமையின் ஆற்றலை இந்த புகைப்படம் உலகிற்க நிரூபித்திருப்பதாகவும் அவர் கூறினார். விண்வெளி ஆராய்ச்சியில் சாத்தியமில்லாமல் இருந்ததையெல்லாம் அமெரிக்கா சாத்தியமாக்கும் எனக் கூறிய பைடன், விண்வெளி ஆய்வுக்காக அதிக அளவு தொகையை இனி வரும் காலங்களிலும் அமெரிக்கா செலவிடும் என்றார்.
நாசா விஞ்ஞானிகளின் தொலை நோக்கு சிந்தனையால் உதித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இன்னும் என்னென்ன ஆச்சர்யங்களை பதிவு செய்து பூமிக்கு அனுப்பப்போகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.








