முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

கொங்கு மண்டலம்…இடைத்தேர்தல்…பலத்தை நிரூபிக்கப்போவது யார்?…


எஸ்,இலட்சுமணன்

கட்டுரையாளர்

ஆட்சிக்கு வந்த பின்னர் திமுக தனது முதல் இடைத் தேர்தலை தனக்கு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சவாலாக விளங்கிய  கொங்குமண்டலத்தில் சந்திக்க உள்ளது.  

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் அகால மரணம் அடைந்துள்ள சூழலில் தமிழ்நாடு மற்றுமொரு இடைத் தேர்தலை சந்திக்க உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழகத்தில் இடைத் தேர்தல்களில் பொதுவாக ஆளுங்கட்சியோ அல்லது அதன் கூட்டணி கட்சியோதான் பெரும்பாலும் வெல்வது வாடிக்கையாக இருந்துவந்துள்ளது. இந்த வாடிக்கை  அரிதாக சில சமயங்களில் மாறி அமைவதும் உண்டு. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் உள்பட மொத்தம் 28 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றன. இதில் 15 தொகுதிகளில் அதிமுகவும், 13 தொகுதிகளில் திமுகவும் வென்றன. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் வெற்றி பெற்றது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், கொங்கு மண்டலத்தில் அக்கூட்டணிக்கு சற்று பின்னடைவே ஏற்பட்டது. அங்கு அதிமுக கூட்டணி தனது பலத்தை நிரூபித்தது.  கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களை கொண்ட கொங்குமண்டலத்தில் 68 தொகுதிகளில் 44 தொகுதிகளை அதவாது சுமார் 65 சதவீத இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. அந்த கூட்டணி மொத்தம் வென்ற 75 தொகுதிகளில் சுமார் 59 சதவீதம் கொங்கு மண்டலத்திலிருந்து பெறப்பட்டவைதான்.

இந்த கொங்கு மண்டலத்தில்தான் தற்போது இடைத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது திமுக. கொங்கு மண்டலத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிதான் தற்போது இடைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. அத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் அகால மரணமடைந்துள்ளதையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. பெருந்துறை, பவானி, கோபிச்செட்டிபாளையம், பவானி சாகர் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக வென்றது. மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி வெற்றி பெற்றார். ஈரோடு மேற்கு, அந்தியூர், ஆகிய 2 தொகுதிகளில் திமுகவும், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் வெற்றி பெற்றன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வெ.ரா,  அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜாவைவிட 8904 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். திருமகன் ஈ.வெ.ராவுக்கு 44.27 சதவீத வாக்குகள் அதாவது 67,300 வாக்குகள் கிடைத்தன.  தமாகா வேட்பாளர் யுவராஜாவுக்கு 38.41 சதவீத வாக்குகள் அதாவது 58,396 வாக்குகள் கிடைத்தன. மூன்றாவது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதிக்கு 11,629 வாக்குகள் கிடைத்தன. 4வது இடத்தை பிடித்த மக்கள் நீதி மய்யம் 10,005 வாக்குகளை பெற்றது. 5வது இடத்தை நோட்டா பிடித்தது. நோட்டாவிற்கு 1,546 பேர் வாக்களித்தனர். 6வது இடத்தை பிடித்த அமமுக 1,204 வாக்குகளைப் பெற்றது.

கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரைமைப்பின்போது புதிதாக உருவாக்கப்பட்ட  ஈரோடு கிழக்கு தொகுதி இதுவரை மூன்று சட்டப்பேரவை தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இதில் 2011 மற்றும் 2016ம் ஆண்டு தேர்தல்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், திமுக வேட்பாளர் எஸ்.முத்துசாமியைவிட 10,644 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 2016ம் ஆண்டு தேர்தலில் திமுக ஆதரவுடன் களம் இறங்கிய வி.சி.சந்திரகுமார், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிடம் 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.  இரண்டு முறை தவறவிட்ட ஈரோடு கிழக்கு தொகுதியை கடந்த தேர்தலில் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அதற்கு முந்தைய தேர்தல்களின் முடிவுகளை சுட்டிக்காட்டி கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என அக்கட்சியினர் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் உட்கட்சி பூசல் உள்பட பல்வேறு அதிரடி அரசியல் மாற்றங்களை எதிர்கொண்டுள்ள அதிமுக, தங்கள் கட்சி தற்போதும் பலமாக உள்ளது என்பதையும், அதிமுக கொங்கு மண்டலத்தின் கோட்டை என்பதையும் நிரூபிக்க ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அதே நேரம் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை கடந்த உள்ளாட்சி தேர்தலிலேயே தகர்த்துவிட்டதாகக் கூறும் திமுக அதனை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பெறும் வெற்றியின் மூலமும் நிரூபித்துக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கே மீண்டும் திமுக ஒதுக்குமா அல்லது தாமே களம் இறங்குமா என்கிற கேள்வியும் தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது?

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உ.பி.யில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம்?

G SaravanaKumar

நியாயவிலைக்கடைகளில், தகவல் பலகை அமைக்க உத்தரவு

Arivazhagan Chinnasamy

11 நாட்களில் ரூ.250 கோடி வசூலை குவித்த வாரிசு!

Jayasheeba