இராமேஸ்வரம் அருகே ரயில் தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரிப்பதை கண்ட ரயில் ஓட்டுநர் முன்னதாகவே ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இராமேஸ்வரம் அடுத்த ஒண்டிவீரன் நகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில்
ரயில் தண்டவாளத்தில் குறுக்கே இருசக்கர வாகனத்தை மர்ம நபர் தீயிட்டு
எரித்துள்ளார். அப்போது வாரம் ஒரு முறை மட்டும் ராமேஸ்வரத்துக்கு வரக்கூடிய
ஜெகந்திராபாத் ரயில் அதிகாலை 3 மணியளவில் வந்து கொண்டிருந்த போது
தண்டவாளத்தில் இருசக்கர வாகனம் கொழுந்துவிட்டு எரிந்ததை பார்த்த ரயில் இன்ஜின்
டிரைவர் 100 மீட்டர் முன்பாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து
தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து ராமேஸ்வரம் ரயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதை
அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் எரிந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை அப்புறப்படுத்தினர். இதனால் 45
நிமிடம் தாமதமாக இராமேஸ்வரம் ரயில் நிலையத்தை வந்து அடைந்தது.
இதுகுறித்து ரயில்வே போலீசார் மர்ம நபர்கள் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே
இருசக்கர வாகனத்தை எரித்து ரயிலை கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டனரா? அல்லது
வேறு ஏதேனும் காரணத்திற்காக இருசக்கர வாகனத்தை ரயில் தண்டவாளத்தில்
எடுத்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் எரிக்கப்பட்ட இருசக்கர வாகனம் யாருடையது என்று ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் ராமேஸ்வரம் அடுத்த மெய்யம்புள்ளி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவருடைய இரு சக்கர வாகனம் என்றும் அவரை போலீசார் விசாரணை நடத்தியதில் நேற்று நள்ளிரவில் இருந்து எனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை என்று கூறியதையடுத்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று ரயில்வே போலீசார் மற்றும் ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.








