சென்னை அருகே மின்சார பைக்குகளை ஏற்றி வந்த லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் மின்சார பைக்குள் சேதமில்லாமல் மீட்கப்பட்டது.
பெங்களூரிலிருந்து சென்னை நுங்கம்பாக்கம் நோக்கி மின்சாரம் பைக்குகளை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது சரக்கு லாரி சென்னை அமைந்தகரை ஸ்கைவாக் எதிரே வந்த போது லாரியின் முன்புறத்தில் இருந்து திடீரென புகை வெளிப்பட்டது. உடனே லாரியை நிறுத்தி ஓட்டுநர் பார்த்தபோது முன்புறத்தில் தீ பிடித்து எரிந்தது.
இதையடுத்து உடனடியாக கோயம்பேடு, கீழ்ப்பாக்கம் மற்றும் வேப்பேரு உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். லாரியின் முன் பகுதி முழுவதும் எரிந்த நிலையில், வாகனத்தில் பின் பகுதியில் தீ பரவுவதற்கு முன் கட்டுபடுத்தியதால் சரக்கு லாரியில் இருந்த பதினெட்டுக்கும் மேற்பட்ட மின்சார பைக்குகள் பத்திரமாக மீட்கப்பட்டது. மேலும் பேட்டரி மின் கசிவால் தீ பிடித்ததா? அல்லது வேறு காரணமாக என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.








