புதுச்சேரியில் நுண்கலை ஆசிரியர் ஒருவர் 500 கிலோ காகிதங்களை கொண்டு 15 அடி விநாயகரை உருவாக்கி வருகிறார்.
புதுச்சேரி கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி அரசு மேல்நிலைப்பள்ளி நுண் கலை ஆசிரியர் கிருஷ்ணன். இவர் கடந்த 20 ஆண்டுகளாக பழைய பேப்பர்களை கொண்டு பல்வேறு சிற்பங்களை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் 20 கிலோ விநாயகர் செய்து பாராட்டைப் பெற்ற இவர் இந்த ஆண்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஊர் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 4 மாதங்களாக பல்வேறு வீடுகளில் இருந்து பெறப்பட்ட 500 கிலோ பழைய காகிதங்களைக் கொண்டு 15 அடி விநாயகரை தயாரித்து வருகிறார்.
500 கிலோ பழைய காகிதம் மற்றும் 200 கிலோவுக்கு மேற்பட்ட பசைகளைக் கொண்டு தனது பள்ளி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள சிறுவர்களை கொண்டு இதனை தயாரித்து வருகிறார். பின்னர் விநாயகர் சதுர்த்தி அன்று தனது பகுதியில் வைக்க உள்ளார்.
காகிதம் மூலம் தயாரிக்கப்படும் விநாயகர் தற்போது அப்பகுதி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று தினந்தோறும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இதனை கண்டு இதுபோன்று விநாயகர் தயாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து நுண் கலை ஆசிரியர் கிருஷ்ணன் கூறும்போது, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் வரும் ஆண்டுகளில் காகிதம் மற்றும் களிமண் கொண்டு விநாயகர் தயாரிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
ரூபி.காமராஜ்







