திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் – நிர்வாகிகள் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

ஒவ்வொரு சங்கங்களின் நிர்வாகிகளும், தங்கள் சொந்த நலனை கருதியே முடிவுகளை எடுக்கின்றனர் எனவும், உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க…

ஒவ்வொரு சங்கங்களின் நிர்வாகிகளும், தங்கள் சொந்த நலனை கருதியே முடிவுகளை எடுக்கின்றனர் எனவும், உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க கோரியும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வழக்கு தொடர்ந்த நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு சங்க நிர்வாகிகளும், தங்கள் சொந்த நலன் கருதியே முடிவுகளை எடுப்பதாகவும், உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மேலும், சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்த அரசாணை காலாவதியாகிவிட்டதால், இரு வாரங்களில் புதிதாக சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, சங்கத்தின் கணக்குகளை முறைப்படுத்தி, உறுப்பினர் பட்டியலை தயாரித்து தேர்தல் நடத்த வேண்டும் என சிறப்பு அதிகாரிக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.