தமிழ்நாட்டில் சினிமா படப்பிடிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் 51 இடங்களில் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன.
கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்ட பின் சினிமா தயாரிப்பு செலவுகள் அதிகரித்திருப்பது, நடிகர் நடிகைகள் ஆகியோருக்கு கொடுக்கப்படும் அதிக சம்பளத்தை குறைக்க இயலாமல் திரைத்துறை திணறுவது, டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநில அரசுகள் மறுப்பு தெரிவித்து வருவது, ஓ டி டி தளத்தில் திரைப்படங்கள் வெளியாவதால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்படும் இழப்பு, தொழிலாளர்கள் அதிக ஊதியம் கேட்டு போராட்டம் நடத்தியது ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் திரைப்படத் தயாரிப்பு பணிகள் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.
ஹைதராபாத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு அதிகரித்துள்ளது. ஷாருக்கானின் ஜவான், ரஜினிகாந்தின் ஜெய்லர், கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட படப்பிடிப்புகள் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு காரணமாக 10,000 ஆயிரம் பெப்சி தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர்.
நேற்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் 51 இடங்களில் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. பெப்சி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவர்களது குடும்பங்கள் பலனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா








