ஐரோப்பாவில் நடைபெறும் FIH ஹாக்கி புரோ லீக் 2022-23 தொடருக்கான இந்திய அணியை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
FIH ஹாக்கி புரோ லீக் 2022-23, பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். அந்த வகையில் சில போட்டிகள், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியனான ஜெர்மனியை 2 முறை வீழ்த்தி இந்திய அணி அதிரடி காட்டியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஐரோப்பாவில் வரும் 26 ஆம் தேதி முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை FIH ஹாக்கி புரோ லீக் 2022-23 தொடர் நடைபெற உள்ளது. இதில், பெல்ஜியம், பிரிட்டன், நெதர்லாந்து, அர்ஜென்டினா ஆகிய அணிகளுடன் இந்தியா மோதவுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ள இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரேக் ஃபுல்டன் வழிநடத்தலின் படி, கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணியை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கோல்கீப்பர்கள் : கிரிஷன் பகதூர் பதக், பிஆர் ஸ்ரீஜேஷ்.
டிஃபெண்டர்ஸ் : ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங், மன்பிரீத் சிங், சுமித், சஞ்சய், மந்தீப் மோர், குரீந்தர் சிங்.
மிட்ஃபீல்டர்ஸ் : ஹர்திக் சிங் (துணை கேப்டன்), தில்ப்ரீத் சிங், மொய்ராங்தெம் ரபிச்சந்திர சிங், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங், விவேக் சாகர் பிரசாத்.
ஃபார்வர்ட்ஸ் : அபிஷேக், லலித் குமார் உபாத்யாய், எஸ் கார்த்தி, குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங், ராஜ் குமார் பால், மந்தீப் சிங், சிம்ரன்ஜீத் சிங்.







