நெல்லை திசையன்விளை தாலுகா பகுதிகளில் வறட்சி காரணமாக 50 ஆயிரம் வாழை மரங்கள் கருகின.
நெல்லை மாவட்டம், திசையன்விளை தாலுகா பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வந்தனர். போதிய பருவ மழையில்லாமல் தண்ணீர் விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் காப்பாற்ற முடியாத நிலையில் உள்ளது.
இதுகுறித்து முதுமெத்தன்மொழியை சேர்ந்த விவசாயி அரிச்சந்திரன் கூறுகையில், தண்ணீர் வரும் என்று நம்பி வாழை சாகுபடி செய்தோம் ஆனால் பருவமழை பொய்த்து விட்டது. என் மனைவி நகைகள், அண்ணன், தம்பி நகைகள் வங்கியில் அடமானத்தில் வைத்து விவசாயம் செய்கின்றோம் எனவும், நகைகளை அரசு தள்ளுபடி செய்ததால் தான் மீண்டும் விவசாயம் செய்ய முடியும் எனவும் கூறினார்.
அப்பகுதியை சேர்ந்த விவசாயி தீபன் கூறுகையில், இந்த ஆண்டு மழை இல்லாததால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் பட்டுப் போய்விட்டது . போர் 600 அடிக்கு மேல் போட்டாலும் தண்ணீர் இல்லை; ஒரு போர் போட 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை செலவாகிறது எனவும், மணிமுத்தாறு டேமிலிருந்து இந்த அதிசய கிணற்றுக்கு தண்ணீர் விட்டால் விவசாயம் செழிக்கும் எனவும் கூறினார். இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனகா காளமேகன்






