எப்ப பாரு குடிப்பது தான் வேலையா என கேட்டு மது பாட்டிலை உடைத்ததால் தனது இரு மகள்களையும் கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் அடுத்த சின்ன மதுரைப்பாக்கம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கோவிந்தராஜ் சரிவர வேலைக்கு செல்லாத நிலையில் இவரது மனைவி ஊத்துக்காடு அருகே உள்ள தனியார் கம்பெனியில் ஹவுஸ் கீப்பிங் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது தேர்வு நடைபெற்று வருவதால் அவரது மகள்கள் நந்தினி (+1) மற்றும் தீபா(5ம் வகுப்பு) ஆகியோர் வீட்டில் இருந்தனர். நேற்று மதியம் 12 மணியளவில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த தந்தையிடம் எப்பப் பாரு குடிப்பது தான் வேலையா என கேட்டு மதுபாட்டிலை உடைத்துள்ளார் பெரிய மகள் நந்தினி. 

இதில் கோபம் அடைந்த அவரது தந்தை அருகில் இருந்த கட்டையால் இருவரையும் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் மரணம் அடைந்தனர். தான் செய்த குற்றத்தை உணர்ந்து தானே ஒரகடம் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார் கோவிந்தராஜ். இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரின் உடலையும் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். இதுகுறித்து காவல்துறை மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவிந்தராஜுக்கு நந்தினி, நதியா, தீபா, தீபன் என நான்கு குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த மாதம்தான் நதியா தனது தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த வழக்கே நிலுவையில் உள்ள நிலையில் தற்போது தனது மற்ற இரு மகள்களையும் கோவிந்தராஜ் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: