ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக முகநூலில் சர்ச்சை கருத்து பதிவிட்டதாக எழுந்த புகாரை அடுத்து, வரலாற்றுத் துறை பேராசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஹிந்து கல்லூரியில் வரலாற்றுத் துறையின் பேராசிரியராக ரத்தன் லால் பணிபுரிந்து வருகிறார். அவர், முகநூலில் ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்டதாக டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், “ரத்தன் லாலில் கருத்து இரு பிரிவினரிடையே பகையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளது. ஞானவாபி விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இது மிகவும் உணர்வுப்பூர்வமானப் பிரச்னையாக அணுகப்பட வேண்டும். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது. இந்தப் புகாரில் பேரில் டெல்லி போலீஸார் ரத்தன் லால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
“கருத்தை பின்வாங்க மாட்டேன்”
இதனிடையே, தனது கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்று ரத்தன் லால் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவில் யாரைப் பற்றியும் அல்லது எதைப் பற்றியும் நீங்கள் பேசினாலும் மற்றொரு சாரரின் உணர்வு புண்படும். ஆகவே இது ஒன்றும் புதிது கிடையாது. நான் ஒரு வரலாற்றுத் துறை பேராசிரியர். சில விஷயங்களை படித்துத் தெரிந்து கொண்ட பிறகே அத்தகைய கருத்தை முகநூலில் பதிவிட்டேன். அந்தப் பதிவில் மிகவும் கவனமாகவே வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறேன். எனவே எனது கருத்தை பின்வாங்க மாட்டேன்” என்றார். முன்னதாக, ஞானவாபி மசூதி விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டதற்காக எனது மகனுக்கு முகநூலில் அச்சுறுத்தல்கள் வந்தன என்று கடந்த வாரம் கூறியிருந்தார். பேராசிரியர் பணியுடன், அம்பேத்கர்னாமா என்ற ஆன்லைன் ஊடகத்தையும் அவர் நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கண்டனம்
இதனிடையே, ரத்தன் லால் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பேராசிரியர் ரத்தன் லால் கைது செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவருடைய கருத்தைப் பொது வெளியில் பதிவு செய்யவும் வெளிப்படுத்தவும் அரசமைப்பு சட்டம் அவருக்கு உரிமை அளித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி: உத்தரப் பிரதேச மாநிலம், வாராணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள் சிலைகளை வழிபட அனுமதி அளிக்கக் கோரி ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் வாராணாசி உரிமையியல் நீதிமன்றத்தை அணுகினர். அவர்களின் மனுவை விசாரித்த நீதிமன்றம் மசூதியில் கள ஆய்வு நடத்தி அதை வீடியோவாகப் பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.








