ஆரணி அருகே ரேஷன்கார்டு அடகு வைத்து குடித்துவிட்டு வந்த மகனை தட்டிகேட்ட தாயை தாக்கி தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி – பவானி தம்பதியினர். இவர்களுக்கு பபிதா என்ற மகள் மற்றும் பாஸ்கரன், பார்த்தீபன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் பாஸ்கரன் என்பவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,
கடந்த 6 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஸ்கரன் நேற்று வீட்டிலுள்ள ரேஷன் கார்டை எடுத்து சென்று அடமானம் வைத்து குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டிற்கு வந்த பாஸ்கரனிடம் அவரது தாய் ரேஷன் கார்ட் கேட்டதால் மதுபோதையில் அவரை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தட்சிணாமூர்த்தி மகன் பாஸ்கரனை திட்டியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த தந்தை தட்சிணாமூர்த்தி, பாஸ்கரனை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலிறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை செய்த தஷ்ணாமூர்த்தியை கைது செய்து களம்பூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.







