அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு விவசாய நிலத்தில் ஒரு பிடி மண் எடுக்க கை வைத்தால் சாகும் வரை நான் உண்ணாவிரதம் இருப்பேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில்பேட்டை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 5 ஊராட்சிகளில் 3731ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்த அரசு அரசாணையும் வெளியிட்டுள்ள நிலையில் இதற்கு இந்த பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று அன்னூர் பகுதி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக சார்பில் அன்னூர் பேருந்து நிலையம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
அப்போது பேசிய அண்ணாமலை, கேரள அரசு தேனி மாவட்டத்தில் தமிழக விவசாய நிலங்களை சுமார் 80 ஏக்கர் வரை தன்னுடைய நிலம் என கையகப்படுத்தி வருகிறது. ஆனால் அதனை தடுக்காத திராவிட மாடல் அரசு கேரள முதல்வர் பிரானாயி விஜயனை புகழ்ந்து பேசி வருவதாக குற்றம்சாடினார்.
மேலும், அன்னூரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விவசாய நிலங்களை பிடுங்கி கொடுக்க முயல்கிறது. ஒரு போதும் அதனை அனுமதிக்க மாட்டோம். அன்னூரில் தொழில் பேட்டை அமைக்க தமிழக அரசு விவசாய நிலத்தில் ஒரு பிடி மண் எடுக்க கை வைத்தால் சாகும் வரை நான் உண்ணாவிரதம் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் மூலம் போராட்டத்தை முடித்து விடலாம் என நினைத்து விடாதீர்கள்
எத்தனை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் வந்தாலும் சரி எங்களது போராட்டம் தீவிரமாக இருக்கும். அதே சமயத்தில் கோவை செட்டிபாளையம் ஜி-கொயர் என்ற நிறுவன 504 ஏக்கர் விவசாய நிலத்தை ஸ்டாலின் குடும்பம் வாங்கியுள்ளாத குற்றம்சாட்டிய அண்ணாமலை, அது நாங்கள் இல்லை என்று சொன்னால் ஆதாரத்தை வெளியிடுகிறேன் என்றார்.
ஒட்டு மொத்த அதிகார மையமும் சேர்ந்து வந்தாலும், நாங்கள் சிறைக்கு சென்றாலும், வீறு கொண்டு எழுந்து வருவோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியாக முடிவு எடுப்பார்கள். தொழில் பேட்டை அமைக்க அனுமதிக்க மாட்டோம். துணிவோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை பெற்று கரை சேர்வோம் எனவே துணிவுடன் இருங்கள் என்றார்.







