மத்தியபிரதேசத்தில் உள்ள சில கிராமங்களில், பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக விவசாயிகள் சாராயத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து வருவதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது.
மது உடல் நலத்திற்கு கேடு தரும். ஆனால் மத்திய பிரதேசத்தின் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளோ இதே மது அவர்கள் பயிரிடும் பயிர்களுக்கு நல்லது செய்கின்றது என்று தெரிவிக்கின்றனர். ஏனெனில் அந்த விவசாயிகள் பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்கங்களை தடுக்க, பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக நாட்டு சாராயத்தை பயன்படுத்தி வருகின்றார்களாம். அவ்வாறு செய்யும்போது பூச்சிகளின் தாக்கம் குறைந்துள்ளதாகவும், மேலும் வழக்கத்தை விட நல்ல மகசூல் கிடைத்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், தற்போது பெசரா போன்ற பருப்பு வகைகளுடன், மஞ்சள் பயிரிலும் இந்த நாட்டு சாராயம் 15 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி லிட்டர் அளவு கலந்து தெறிக்கப்பட்டு வருவதோடு, இது பூச்சிக்கொல்லி மருந்தை விட மிக மலிவாக இருப்பதாகவும், மேலும் விளைச்சல் சிறப்பாக உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, பூச்சி மருந்து தெளிக்க ஆகும் செலவு ரூ.100-150 வரை என்றால், நாட்டு சாராயத்தின் விலை
ரூ.10-12 வரை மட்டுமே என்கிறார்கள் அங்கு உள்ள விவசாயிகள்.
அதோடு, பூச்சிக்கொல்லி மருந்துகள் சந்தையில் ரூ.1200 முதல் ரூ.1800 வரை
விற்கப்பட்டு வரும் நிலையில், இந்த நாட்டு மதுபானங்களோ ரூ.100 முதல் ரூ.150 வரையிலேயே கிடைப்பதால் செலவு குறைவதாகவும், இந்த நுட்பம் விளைச்சலின் அளவை அதிகரிப்பது மட்டும் அல்லாமல், அதன் தரத்தையும் உயர்த்துகிறது என்று அவர்கள் நம்புகின்றனர். இருப்பினும், நாட்டு சாராயங்களை பயன்படுத்துவதன் மூலம் நர்மதாபுரம் விவசாயிகள் கூறும் எந்த நிகழ்வுகளும் நடக்க வாய்ப்பில்லை என அறிவியல்
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா









