போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில், முள்ளங்கி விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான ஜம்புகுட்டப்பட்டி, கீழ்குப்பம், புளியம்பட்டி மற்றும் புலியூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 150 ஏக்கருக்கும் மேல் முள்ளங்கி பயிரிட்டுள்ளனர். பெரும்பாலான விவசாய நிலங்களில் உள்ள முள்ளங்கி அறுவடை முடிந்த நிலையில், முள்ளங்கி வரத்து குறைவான காரணத்தால், தற்போது முள்ளங்கி விலை உயர்ந்துள்ளது. சில தினங்களாக தக்காளி விலை உயர்வை தொடர்ந்து, முள்ளங்கியும் விலையேற தொடங்கியுள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூ.12 வீதம், விவசாய நிலங்களில் இருந்து எடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது கிலோ ரூ.20- க்கும் எடுக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு ஏக்கருக்கு சுமார் 10 டன் அளவிற்கு முள்ளங்கி விளைச்சல் இருப்பதால், இந்த ஆண்டு முள்ளங்கி விவசாயிகள் சந்தோஷத்தில் உள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டு முள்ளங்கி விலை போகாமல் ஏரி மீன்களுக்கு உணவாகவும், சிலர் விவசாய நிலங்களிலேயே ஏர் உழுது அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது
மார்கெட்டில் முள்ளங்கி கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது.
கு. பாலமுருகன்








