மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உத்தரபிரதேசத்தில் அவரது ரசிகர்கள் ஓவியம் வரைந்து மரியாதை செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே கடந்த 4ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கிரிக்கெட் உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்த அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர். ஆஸ்திரேலியா மட்டுமல்லாது உலக அளவில் தனக்கானவர்களை உருவாக்கி வைத்திருந்த வார்னேவின் திடீர் மறைவு பலருக்கு அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் பகுதியை சேர்ந்த அவரது ரசிகர்கள் மரியாதை செலுத்தும் விதமாக சுவர்களில் வார்னேவின் சிறந்த புகைப்படங்களை வரைந்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓவியம் வரைந்த ரசிகர் ஒருவர் பேசியதாவது, ”ஷேன் வார்னே ஒரு தலைச் சிறந்த பந்துவீச்சாளர். அவர் தனது பந்துகளால் பல பேட்ஸ்மேன்களை திணறவைத்துள்ளார். அவருக்கு எங்களுக்கு அஞ்சலியை செலுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.
அப்போது பேசிய மற்றொரு ஓவியர், “தனது சிறந்த தந்திரத்துடன் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வந்தவர் ஷேன் வார்னே. தனது பெயரில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச அளவில் ஒரு பந்துவீச்சாளராக 1000க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார். அவரது உயரத்தை வேறு யாரும் தொட்டதில்லை” என்று உருக்கமாக பேசினார். உண்மையில் ஷேன் வார்னெவின் மறைவு உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.







