கோவையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், காவல் ஆய்வாளர் மற்றும் அவரது கணவர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக கோவையில் பணியாற்றி, தற்போது நீலகிரி மாவட்டம் புதுமந்து காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் வீரம்மாள். இவரது கணவர் சரவணன் தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு மாறுதல் பெற்ற ஆய்வாளர் வீரம்மாள் நேற்று வழக்கு தொடர்பாக கோவை வந்ததாகத் தெரிகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், காவலர் குடியிருப்புக்குச் சென்ற வீரம்மாள் மற்றும் சரவணன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கணவன், மனைவி இருவரும் நேற்று மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அதில் சரவணன் இரும்பு ராடால்
தாக்கியதில் வீரம்மாள் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும், வீரம்மாள்
உருட்டுகட்டையால் கணவர் மீது தாக்குதல் நடத்தியதில் சரவணன் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், கணவர் சரவணன் பந்தய சாலை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் வீரம்மாள் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய இருபிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல காவல் ஆய்வாளர் வீரம்மாள் கொடுத்த புகார் அடிப்படையில் கணவர் சரவணன் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டம், ஆபாசமாகப் பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் பந்தயச்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ம.பவித்ரா