சென்னையில் 2015 ஜூன் 29 இல் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை 7 ஆண்டுகளை நிறைவு செய்து 8 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
பயணிகளுக்கு புதுமையையும், மாநகருக்கு வளர்ச்சியையும் தந்துகொண்டிருக்கும் அதன் சேவை குறித்த தொகுப்பை காணலாம்….
பொதுப் போக்குவரத்தின் நவீன வடிவங்களுள் ஒன்று மெட்ரோ ரயில். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயர் ரக வசதிகள், தொடர் சேவை என மற்றப் போக்குவரத்தைவிட மாறுபட்டு காட்சியளிக்கின்றது. உலக அளவில் ஒரே மாதிரியான செயல்பாட்டு அம்சங்களை கொண்ட மெட்ரோ ரயில் சேவையின் தரமும் உலகளாவிய தரத்திலேயே அமைந்துள்ளது.
பண்பாட்டு தலைநகராகவும், உள்கட்டமைப்பு கொண்ட நகரங்கள் அதிகம் கொண்ட தமிழ்நாட்டின் தலைநகராகவும் உள்ள சென்னை மாநகரின் தேவைகளை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றி வருகின்றது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் யாரால் கொண்டு வரப்பட்டது என திமுக, அதிமுகவினரிடையே விவாதப் பொருளாகவே இருந்து வந்தாலும், மெட்ரோ திட்டத்தின் மீது ஆரம்பம் முதலே தனிப்பட்ட ஆர்வத்தை செலுத்துபவராகவும், அதன் செயல்பாடுகளை உற்சாகத்துடன் அவ்வவ்போது பயணித்து அறிபவராகவும் மட்டுமல்லாமல், முதலமைச்சரானதும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து அதன் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னையில் 54 கிமீ தொலைவிற்கு சேவை வழங்கி வரும் மெட்ரோ ரயில் 2015 மழை வெள்ள காலத்தில் மக்களுக்காக இயங்கிய ஒரே பொதுப் போக்குவரத்தாகவும், மழை, புயல் காலங்களில் மக்களுக்கு கைகொடுக்கும் சேவையாகவும் இருந்து வருகின்றது. தொடக்கக் காலத்தில் கட்டணம் குறித்த புகார்கள் இருந்தாலும், பிடித்தமான போக்குவரத்தாக மாறியிருக்கின்றது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் செயல்பாடு, எதிர்காலத் திட்டங்கள்:
மெட்ரோ பணிகள் தொடக்கம்: சென்னையில் உயர்மட்ட மெட்ரோ ரயில் பணிகள் 10 ஜூன் 2009, சுரங்கப் பணிகள் அண்ணா சாலையில் ஜூலை 2012இல் தொடங்கப்பட்டது.
சிறப்பம்சங்கள்: உயர்மட்ட வழி, சுரங்க வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்.
நீர்வழித்தடங்களின் மேலும், கீழும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. விமான நிலையம் அருகே விமானங்கள் தாழ்வாக பறப்பதன் காரணமாக மெட்ரோ வழித்தடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே சுரங்கப்பாதையில் மெட்ரோ செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. உயர்மட்ட வழியில் கத்திப்பாரா பாலத்தைக் கடக்கும் பகுதியில் நீண்ட தூரத்திற்கு தூண்கள் இல்லாத வகையில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கிண்டி ரயில் நிலையம் அருகே மட்டும் இரும்பு பாலம் அமைக்கப்பட்டு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் கட்டுமானம் முறையாக பராமரிக்கப்பட்டால் சுமார் 80 ஆண்டுகாலம் உறுதியாக இருக்கும் என பொறியாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
முதல் ரயில்: கோயம்பேடு – அசோக் நகர் இடையே 14 பிப்ரவரி 2014இல் முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பயணிகள் சேவை: கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10.29 கி.மீ. தொலைவிற்கு 29 ஜூன் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
நிலையங்கள்: 20 சுரங்க ரயில் நிலையங்கள், 12 உயர்மட்ட ரயில் நிலையங்கள்,
என மொத்தம் 32 ரயில் நிலையங்கள் உள்ளன.
உயரமும், ஆழமும்: சுரங்க வழித்தடத்தில் 50 அடிக்கு கீழே ரயில் இயக்கம்.
உயர்மட்ட வழித்தடத்தில் 41 அடி உயரத்தில் ரயில்கள் இயக்கம்.
மெட்ரோ ரயில்கள்: 4 பெட்டிகள் கொண்ட ஒரு மெட்ரோ ரயிலில் 1,300 பயணிகள் பயணிக்கலாம். 2015-16இல் நாளொன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த எண்ணிக்கை தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளை கையாளும் ஒன்றாக வளர்ந்திருக்கின்றது
அடுத்தக்கட்ட திட்டங்கள்: 119 கி.மீ இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. மாதவரம் – கோயம்பேடு, மாதவரம் – சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் – மீனாட்சி கல்லூரி.
எதிர்கால திட்டங்கள்: சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையேயான திட்டம். ஒசூர் – பெங்களூர் என தமிழ்நாட்டையும், கர்நாடகாவையும் மெட்ரோ சேவை மூலம் இணைக்கும் திட்டம். திருச்சி, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி மெட்ரோ ரயில் திட்டத்திற்கான செயல்திட்டங்கள்.
-தேவா இக்னேசியஸ் சிரில்







