கலெக்டர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் கும்பல்!

ஆட்சியர்களின் பெயரில், அவர்களது புகைப்படத்துடன் வாட்ஸ் அப்பில் போலி கணக்குத் தொடங்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஃபேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி குறுஞ்செய்தி மூலம்…

ஆட்சியர்களின் பெயரில், அவர்களது புகைப்படத்துடன் வாட்ஸ் அப்பில் போலி கணக்குத் தொடங்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி குறுஞ்செய்தி மூலம் பணம் பறித்து வந்த மர்ம கும்பல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டதையடுத்து, அதுபோன்ற செயல்கள் குறைந்து வந்தன. தற்போது அந்த கும்பல் ஒருபடி மேலே சென்று ஆட்சியர்களின் பெயரில் போலி வாட்ஸ் அப்  கணக்குத் தொடங்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி சென்றுள்ளது. அதில், நீங்கள் எவ்வாறு இருக்கிறீர்கள், வேலை எல்லாம் எவ்வாறு நடக்கிறது என குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அலுவலர்களும் பதில் அளித்து வந்துள்ளனர். இதையடுத்து, வங்கி விவரம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்திடம் இதுகுறித்து கூறியுள்ளனர். அப்போது, அவரது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி போலி வாட்ஸ் அப் கணக்குத் தொடங்கி மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, சைபர் கிரைம் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காவல் துறையினர் மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி போலி வாட்ஸ் அப் கணக்குத் துவங்கப்பட்டு, பண மோசடியில் ஈடுபட முயன்றுள்ளனர். இதுகுறித்து, ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த நம்பரில் இருந்து நான் எனக் கூறி ஏதாவது குறுச்செய்தி அல்லது தகவல் வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள், நான் எந்த எண்ணில் இருந்தும் யாருக்கும் பண உதவி கேட்டு குறுச்செய்தி அனுப்பவில்லை. இதுபோன்ற போலியான மற்றும் மோசடி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனப் பதிவிட்டுள்ளார்.

ஆட்சியர்களின் பெயரிலேயே பண மோசடியில் ஈடுபட்டுள்ள இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.