சேலம் உருக்காலை பங்குகள் விற்பனை தொடர்பாக மத்திய இரும்பு எஃகு துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மாநிலங்களவையில் இன்று விளக்கம் அளித்தார்.
திமுக எம்.பி வில்சன் இன்று மாநிலங்களவையில் சேலம் உருக்காலை தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பினார். ”சேலம் உருக்காலையின் பங்குகளை விற்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுவரும் நிலையில் அந்த ஆலையின் தற்போதைய நிலை என்ன? அங்கு ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களின் பணி பாதுகாப்பில் மத்திய அரசு அக்கறை காட்டுமா” என வில்சன் கேள்வி எழுப்பினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதில் அளித்த மத்திய இரும்பு எஃகு துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சேலம் உருக்காலையின் பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்கிற முடிவில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மத்திய நிதி அமைச்சகமும் தமது அமைச்சகமும் இணைந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்காக முதலீட்டாளர்கள் சேலம் உருக்காலையில் ஆய்வு செய்யவும், வர்த்தக விசாரணைகளில் ஈடுபடவும் மத்திய அரசு முயற்சித்ததாக கூறிய அவர், எனினும் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தகுந்த பாதுகாப்பான சூழலை தமிழக அரசு ஏற்படுத்தவில்லை என்பதை வருதத்துடன் அவையில் தெரிவித்துக்கொள்வதாக கூறினார். எனினும், சேலம் உருக்காலையின் பங்குகளை விற்பதற்கான ஏலம் தொடர்பான நடவடிக்கைகள் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என தாம் நம்புவதாகவும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறினார்.