மதுரையில் முகநூல் மூலம் பழகி ஆசை வார்த்தை கூறி மருத்துவக் கல்லூரி மாணவரிடம் செயின், பணம் பறித்த இளம் பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ஹோமியோபதி மருத்துவம் படித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக்கில் கடந்த 10 நாட்களுக்கு முன் மதுரை செல்லூர்
மீனாட்சிபுரத்தை சேர்ந்த சுப்புராஜ் என்பவருடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர் இளம்பெண் ஒருவரை நவீன்குமாருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணும் நவீன்குமாரும் செல்போன் மூலம் பேசி பழகி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் மதுரை வந்தால் தனியாக இருக்கலாம் என இளம்பெண் கூறியதை நம்பி நவீன்குமாரும், மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே கத்தி முனையில் நவீன்குமாரை மிரட்டிய மூன்று பேர் அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் நகைகள் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு துரத்தியுள்ளனர். இதுகுறித்து நவீன்குமார் அளித்த புகாரின்பேரில் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார், சுப்புராஜ், நஷீத் முகைதீன், சையது அலி மற்றும் இளம்பெண் உமா வைத்தீஸ்வரி ஆகியோரை கைது செய்தனர்.







