சென்னையில் மெட்ரோ ரயில்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மெட்ரோ நிலையங்களுக்கு வந்து செல்வோரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
மெட்ரோ நிலைய வாயில்களில் பயணிகள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்று சரிபார்த்து நிர்வாகம் அனுப்பும். முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு மெட்ரோ நிலையங்களுக்குள் அனுமதியில்லை. உடல் வெப்பநிலை பரிசோதனையும் மெட்ரோ நிலையங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பேருந்துகளில் பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதையடுத்து, முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கூட்டம் அதிகம் கூடும் திரையரங்கங்கள், மார்க்கெட், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மால்கள் போன்ற இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.








