அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென் கிழக்கு வங்க கடல் முதல், தமிழ்நாடு கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 12- ஆம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் தற்போது மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடதமிழகம் அருகே 11 ஆம் தேதி வரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, வங்கக் கடல், அரபிக்கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசும் என்றும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.