மனைவியுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக, நண்பனின் கழுத்தை அறுத்து, அவரது ரத்தத்தை குடித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் உள்ள மாண்ட்யாம்பேட் பகுதியில் விஜய் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயின் நண்பர் மாரேஷூக்கும் அவரது மனைவிக்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த விஜய், நண்பர் மாரேஷை சித்தாபள்ளி பகுதியில் வைத்து அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயன்றதாக தெரிகிறது.
நண்பர் மாரேஷ் மீது இருந்த ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள தனது உறவினருடன் மாரேஷை போனில் அழைத்துள்ளார் விஜய். இதன் பின்னர் மூவரும் தக்காளி தோட்டத்திற்கு அவரை அழைத்துச் சென்று இந்த கொடூர செயலை செய்துள்ளதாக தெரிய வருகிறது.
மேலும், கொடூரத்தின் உச்சமாக அவரது ரத்தத்தை குடித்த விஜய், அங்கிருந்து தப்பியுள்ளார். மாரேஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த வீடியோ வைரலாகியுள்ளது. இது காவல்துறையின் கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து, கொலை முயற்சியில் ஈடுபட்ட விஜயை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







