அதிமுக பொதுக்குழு தேர்தல் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. வரும் 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கிய தனிநீதிபதி அதிமுக பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். பின்னர் இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு செல்லும் எனவும், ஜூன் 23ம் தேதிக்கு முந்தையை நிலை தொடராது எனவும் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு வழக்கு நாளை விசாரணைக்கு வர இருந்த நிலையில், இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு ஒன்றை பதிவு செய்தார். அதில், நாளை விசாரணைக்கு வர வேண்டிய வழக்கு இதுவரை பட்டியலிடப்படவில்லை என குறிப்பிட்டார். இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் பல்வேறு கட்சிப் பணிகள் தடைபட்டு உள்ளன என்றும் வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டிசம்பர் 11ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை வரும் 6 ஆம் தேதிக்கு கட்டாயம் பட்டியலிட வேண்டும் என்றும் அப்போது இரு தரப்பும் தங்கள் வாதத்தை எடுத்துரைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.







