முக்கியச் செய்திகள் தமிழகம்

உதவித்தொகை குறித்த அறிவிப்பு சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி -கே.நவாஸ்கனி எம்.பி

ப்ரி மெட்ரிக் உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டு இருப்பது சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும் என எம்.பி கே.நவாஸ்கனி கூறியுள்ளார். 

இதுகுறித்து ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்களுக்கு நவாஸ்கனி எம்பி எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறுபான்மை நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த ப்ரி மெட்ரிக் உதவித்தொகை இனி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது சிறுபான்மை சமூக மாணவர்களை வெகுவாக பாதிக்கும் நடவடிக்கையாகும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கல்வி உரிமைச் சட்டம் 2009 -ன் படி நடுநிலை கல்வி வரை இலவச கட்டாய கல்வி வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி இந்த கல்வி உதவித் தொகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த ப்ரி மெட்ரிக் உதவித்தொகை ஆனது மாணவர்களின் கல்விக் கட்டணங்களை மட்டும் சார்ந்தது அல்ல, ப்ரி மெட்ரிக் உதவித்தொகை வழங்கப்படுவதற்கான காரணிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையதள முன்னுரையே தெளிவாக குறிப்பிட்டுள்ளது.ப்ரி மெட்ரிக் உதவித்தொகையானது பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காகவும், பள்ளிக் கல்விக்கான நிதி சுமையை குறைத்து பள்ளிக் கல்வியை முழுமைப்படுத்த உதவுவத்ற்க்காகவும், சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வியை உறுதி செய்வது, கல்வியின் மூலம் அதிகாரப்படுத்துதல் உள்ளிட்ட காரணிகளை உள்ளடக்கி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையதளம் தெளிவுபடுத்துகிறது.

சிறுபான்மை சமூக கல்வி, சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சியாக இத்திட்டத்தினை குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்த உதவித்தொகையானது கல்வி கட்டணத்திற்கு மட்டுமான உதவித்தொகையாக நிச்சயமாக பார்க்க முடியாது என்பதனை குறிப்பிட விரும்புகின்றேன்.

கல்வி கட்டணத்தையும் தாண்டி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போக்குவரத்து, உணவு, சீருடை, கல்விச் சுற்றுலா உள்ளிட்ட இதர செலவுகளுக்கு தங்களுடைய வருமானத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. உணவு சீருடை உள்ளிட்டவை அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்குவது நடைமுறையிலிருந்தாலும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அப்படி ஒரு நிலை இல்லை, அரசு பள்ளி மாணவர்களுக்கும் அது அல்லாத பல்வேறு செலவினங்கள் உள்ளன.

சிறுபான்மை மாணவர்கள் கல்வி பொருளாதார வேலைவாய்ப்பில் பின்தங்கி உள்ளார்கள் என்பதினை சச்சார் குழுவின் அறிக்கைகள் அரசிற்கு தெளிவுபடுத்தி உள்ளன. எனவே கல்வி பொருளாதார வேலைவாய்ப்பில் பின்தங்கியிருக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு மற்ற மாணவர்களோடு சம வாய்ப்பை ஏற்படுத்தும் அளவிற்கு ஈடுகொடுக்க சமூகநீதி அடிப்படையில் கல்வி உதவித் தொகையை வழங்குவது அரசின் கடமை.

எனவே கல்வி உரிமைச் சட்டம் 2009 -ஐ சுட்டிக்காட்டி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ப்ரி மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தினை நிறுத்துவது என்பது சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும். சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் தங்களது முடிவை மறு ஆய்வுக்கு உட்படுத்தி மீண்டும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ப்ரி மெட்ரிக் உதவித்தொகை வழங்கும் முறையிலேயே தொடர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி ஒன்றிய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புத்தகம் ஏந்த வேண்டிய கையில் துடைப்பம்! பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்

Web Editor

பெரிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு

EZHILARASAN D

தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Halley Karthik