கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க கால அவகாசத்தை நீட்டிப்பதா…? – டிடிவி தினகரன் கண்டனம்…!

கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க கால அவகாசத்தை நீட்டித்து பிறப்பிப்பித்துள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க கால அவகாசத்தை நீட்டி தவெக அரசு அரசாணை பிறப்பிப்பதா – மக்களின் உடல்நலத்திற்கும், வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக கருதப்படும் இத்திட்டத்திற்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் .

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதிக்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசின் இயற்கை வளங்கள் துறை அரசாணை பிறப்பித்திருப்பதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கிள்ளியூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனையம், ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 1144 ஹெக்டேர் பரப்பளவில் அமைவதாக இருந்த இத்திட்டம் அமையப்பெற்றால், சுற்றுசூழல் பாதிப்படைந்து அதனால் கொடிய நோய்கள் ஏற்படுவதோடு, இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதிக்கான கால அவகாசம் முடிவடையும் நாளில் மக்களின் எதிர்ப்பிற்கு செவிசாய்க்காமல், அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணை கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இதே திட்டத்தைச் சுட்டிக்காட்டி நாசகார, நச்சுத் திட்டங்களை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய தவெக, ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் அத்திட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பது கன்னியாகுமரி மக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் மட்டுமன்றி, தவெக அரசு மக்களுக்கான அரசு அல்ல என்பதையும் புரியவைத்துள்ளது.

எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், அப்பகுதி மக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டும் நிலம் ஒதுக்கிய ஆணையை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.