தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும், அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, சபாநாயகர் அவர்களை வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது, அதிமுக எதிர்க்கட்சி தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டும் எனக்கூறி அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் அமர்ந்திருப்பதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, பேரவைத்தலைவர் அப்பாவு அதிமுக உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு வலியுறுத்தினார். பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதாகவும், ஓ.பி.எஸ்.இருக்கை குறித்து தான் பதிலளிக்கிறேன் என்றும் கூறினார். ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் அவரது பேச்சை கேட்காமல் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் ஆவேசம் அடைந்த பேரவை தலைவர் அப்பாவு, கழகம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக உறுப்பினர்கள் வந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
பின்னர் தொடர் முழக்கங்களை எழுப்பி வந்த அதிமுக பேரவை உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அப்பாவு அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவை காவலர்கள் உள்ளே நுழைந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்ற முயற்சித்தனர். இதனால் அவை பரபரப்புடன் காணப்பட்டது.








